லைஃப்ஸ்டைல்
காய்கறிகளை வீணாகாமல் பயன்படுத்துவது எப்படி?

காய்கறிகளை வீணாகாமல் பயன்படுத்துவது எப்படி?

Published On 2020-12-25 08:24 GMT   |   Update On 2020-12-25 08:24 GMT
காய்கறிகளை முறையாக பாதுகாப்பதுடன் தக்க சமயத்தில் பயன்படுத்தவும் வேண்டும். இல்லாவிட்டால் வாடி, வதங்கி வீணாகிப்போய்விடும். உணவு பொருட்களை சேமிக்கும் விதம் பற்றியும், வீணாகாமல் தவிர்ப்பது பற்றியும் பார்ப்போம்.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக வழக்கமாக வாங்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் போன்றவற்றை சற்று கூடுதலாகவே நிறைய பேர் வாங்குகிறார்கள். அவற்றை முறையாக பாதுகாப்பதுடன் தக்க சமயத்தில் பயன்படுத்தவும் வேண்டும். இல்லாவிட்டால் வாடி, வதங்கி வீணாகிப்போய்விடும். உணவு பொருட்களை சேமிக்கும் விதம் பற்றியும், வீணாகாமல் தவிர்ப்பது பற்றியும் பார்ப்போம்.

உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை குளிர்ச்சியான இடத்திலோ, உலர்ந்த இடத்திலோ சேமித்துவைக்க வேண்டும். அவை நல்ல காற்றோட்டமான வசதியுடன் இருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும். உருளைக்கிழங்குகள், சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் அதிகமாக இருந்தால் சிப்ஸ்கள், பஜ்ஜிகள் தயாரிக்கலாம். உருளைக்கிழங்கில் கட்லெட்டுகள் தயார் செய்து சாப்பிடலாம். பூண்டு, வெங்காயம் அதிகமாக இருந்தால் அதனுடன் எலுமிச்சை அல்லது வினிகர் சேர்த்து ஊறுகாய் தயாரித்து சேமித்துவைக்கலாம்.

இஞ்சி, வலுவான நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. அதனை குளிர்சாதனப்பெட்டியில் காய்கறி சேமித்து வைக்கும் பெட்டி யில் சேமித்துவைக்கலாம். அது இரண்டு வாரம் ஆனால் கூட கெட்டுப்போகாமல் புதிதாக இருக்கும். இஞ்சி அதிகம் இருந்தால் வெயிலில் உலர்த்தி பொடித்து வைக்கலாம். மாலை வேளையில் இஞ்சி டீ தயாரித்து குடும்பத்தினருடன் அமர்ந்து பருகிவரலாம்.

இஞ்சியை போல மஞ்சளையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம். அவற்றை நீண்ட காலம் பயன்படுத்த விரும்பினால் பிரீசரில் சேமித்து வைக்கலாம். மஞ்சள் அதிகமாக இருந்தால் வெயிலில் நன்றாக உலரவைத்து மஞ்சள் தூள் தயாரித்துக்கொள்ளலாம்.

கொத்தமல்லி தழை, புதினா போன்றவற்றை தண்டுடன் தண்ணீரில் மூழ்கி வைத்தால் வாடிப்போகாமல் இருக்கும். தண்ணீரை அடிக்கடி மாற்றி பராமரித்துவந்தால் இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். குளிர்சாதனப் பெட்டியிலும் சேமித்துவைக்கலாம். கொத்தமல்லி தழை, புதினா தேவைக்கு அதிகமாக இருந்தால் மூலிகை பானம், தேநீர், சாலட்டுகள், சூப்கள் போன்றவற்றை தயாரித்து பருகலாம்.

ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை அறையின் வெப்பநிலையிலேயே ஒருவாரம் வரை நன்றாக இருக்கும். வாழைப்பழம் காயாக இருந்தால் அறை வெப்பநிலையில் பழமாக மாறுவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஆரஞ்சு, ஆப்பிளை நீண்ட நாட்கள் பயன்படுத்த விரும்பினால் குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கலாம்.

வாழைப்பழம் அதிகமாக இருந்தால் சிறிய துண்டுகளாக நறுக்கி பாலித்தீன் பையில் இறுக்கமாக கட்டி பிரீசரில் சேமித்து வைக்கலாம். அவற்றை மில்க் ஷேக், கேக்குகள் தயாரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

பழுத்த மாம்பழங்களை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்து சாப்பிடலாம். காயாக இருந்தால் பேப்பரில் சுருட்டி அறைவெப்பநிலையில் வைத்தால்போதும். நன்றாக பழுத்துவிடும்.

எண்ணெய் வகைகளை அதிக வெளிச்சம் இல்லாத பகுதியில் சேமித்து வைக்க வேண்டும். கருமை நிற பாட்டிலில் சேமித்துவைப்பது நல்லது.

நட்ஸ் வகைகளை காற்றுப்புகாத டப்பாக்களில் சேமித்து வைப்பதுதான் பாதுகாப்பானது. அவற்றை குளிர்ச்சியான இடத்திலோ அல்லது வெளிச்சம் இல்லாத இடத்திலோ வைத்திருக்கவேண்டும்.

முட்டைகளை பிரிட்ஜில் சேமித்துவைக்கலாம். அவை புதியதா என்பதை கண்டறிவதற்கு, கண்ணாடி டம்ளரில் நீர் ஊற்றி முட்டையை மெதுவாக போட வேண்டும். முட்டை மூழ்க தொடங்கினால் புதியது என்று அர்த்தம். முட்டைகள் அதிகமாக இருந்தால் கேக்குகள், குக்கிஸ், பிஸ்கட்டுகள் தயாரித்து சாப்பிடலாம்.
Tags:    

Similar News