லைஃப்ஸ்டைல்
தேன்

தேனில் இப்படியா...?

Published On 2020-10-30 08:41 GMT   |   Update On 2020-10-30 08:41 GMT
வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் சிலவற்றில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பதாகவும், இப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.
உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக குழந்தைகளுக்கு தேன் காலம் காலமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்றளவும் தேனை உற்பத்தி செய்து, நமக்குத் தருபவை தேனீக்களே. அதிகப்படியான தேன் தேவைக்கு பெட்டிகளில் தேனீக்களை வளர்த்து, தேனைச் சேகரிப்பதும் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது.

காலம்காலமாக மக்களின் நம்பிக்கையை பெற்ற தேனுக்கான மவுசு, இந்த நவீன காலத்திலும் குறையாமல்தான் இருக்கிறது. அதே நேரத்தில் வணிக ரீதியில் விற்பனை செய்யப்படும் தேன் சிலவற்றில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் கலந்திருப்பதாகவும், தேன் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், தேனீக்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இப்படி நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பது, உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் சேரும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளால் பாக்டீரியா கிருமிகளின் எதிர்ப்பு சக்தி பெருகிவருகிறது. இதனால், நோய்த்தொற்று ஏற்பட்டு நம் உடலில் புதிய கிருமிகள் பெருகும்போது, அதற்கான மருத்துவச் சிகிச்சையும் பலனற்றுப் போகிறது. இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒரு வகை தேனுக்கு ஐரோப்பிய யூனியன் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்திருக்காவிட்டால், தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருக்கும் பிரச்சினை உலகின் கவனத்துக்கு வந்திருக்காது. சர்வதேச அளவில் உணவுக்கான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை வகுக்கும் கோடெக்ஸ் அமைப்பு, ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை தேனை ‘இயற்கையான உற்பத்தி’ என்று வரையறுத்து, தேனில் ஆன்ட்டிபயாட்டிக் எச்சம் இருப்பதை தடை செய்திருக்கின்றன.
Tags:    

Similar News