லைஃப்ஸ்டைல்
காபி... டீ... அளவுக்கு அதிகமானால்...

காபி... டீ... அளவுக்கு அதிகமானால்...

Published On 2020-09-23 08:03 GMT   |   Update On 2020-09-23 08:03 GMT
அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கு அதிகமான பயன்பாடு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணியும் டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களை குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன? அளவுக்கு அதிகமான பயன்பாடு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையை தாண்டும்போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும் என்றும் கூறுகிறார்கள். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபி அளவுக்கு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான். எலும்பின் உறுதிக்கு துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும்போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அளவுக்கதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகவும் டீ அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் இந்தப் பானங்களை எப்படித் தவிர்ப்பது? அவற்றின் துணை இல்லாமல் இருக்க முடியாதே என்று பலர் கவலைப்படலாம்.

காபியோ, டீயோ அளவுக்கு அதிகமாக குடிப்பதை கூடியவரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்துதான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற சர்க்கரை வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
Tags:    

Similar News