லைஃப்ஸ்டைல்
மூத்த குடிமக்களுக்கான ஆலோசனைகள்

கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம்: மூத்த குடிமக்களுக்கான ஆலோசனைகள்

Published On 2020-04-16 09:52 GMT   |   Update On 2020-04-16 09:52 GMT
கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதால் மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதால் மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் அதிலும் குறிப்பாக உடல்நல குறைபாடுடன் இருப்பவர்களுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் வயதானவர்களுக்கான சிகிச்சை பிரிவுடன் இணைந்து மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களை பராமரிப்பவர்களுக்காக விரிவான ஆலோசனைகளை தயாரித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த காலக்கட்டத்தில் மூத்த குடிமக்கள் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது குறித்து சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

அதன்படி மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை:

* எப்போதும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.

* பார்வையாளர்கள் வீட்டுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.

* சந்திப்பு தவிர்க்க முடியாதது என்றால் 1 மீட்டர் இடைவெளியை பின்பற்றவேண்டும்.

* தனியாக இருக்கிறீர்கள் என்றால் அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு அக்கம், பக்கத்தில் நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்களில் ஒருவரை சார்ந்து இருக்கலாம்.

* குறைவானோர் அல்லது அதிகமானோர் வீட்டில் கூடுவதை தவிர்க்கவேண்டும்.

* வீட்டில் எப்போதும் துடிப்புடன் இருக்கவேண்டும்.

* சின்ன, சின்ன உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வதை பரிசீலிக்கவேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கைகளை நன்றாக கழுவி சுத்தமாக பராமரிக்கவேண்டும்.

* கண்ணாடி உள்பட அடிக்கடி தொடும் பொருட்களை சீரான இடைவெளியில் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

* தும்மல், இருமல் வந்தால் டிஷ்யூ பேப்பர் அல்லது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும். பின்னர் டிஷ்யூ பேப்பர் மற்றும் கைக்குட்டையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, கைகளை நன்றாக கழுவவேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வீட்டில் சமைக்கப்பட்ட சத்தான உணவுகளோடு, தண்ணீர் குடிப்பதையும், பழச்சாறு பருகுவதையும் உறுதி செய்யவேண்டும்.

* உங்களுக்கு கொடுக்கப்பட்ட தினசரி மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

* உடல்நிலையை சீராக கவனிக்கவேண்டும். காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது பிற உடல்நலக் குறைபாடு ஏற்பட்டாலோ அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும்.

* உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களோடு இல்லை என்றால், போன் அல்லது காணொலி காட்சி மூலமாகவோ உரையாடுங்கள். ஒரு வேளை உதவி தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.

* கோடைக்காலம் என்பதால் அதிகப்படியான தண்ணீர் குடிக்கவேண்டும்.

எதை செய்யக்கூடாது?

* கொரோனா நோய் தொற்று இருந்தால், அவர்களோடு நெருங்கி பழகக்கூடாது.

* நண்பர்களிடமோ, அருகாமையில் இருப்பவர்களிடமோ கை குலுக்குவதோ, கட்டித் தழுவுவதோ கூடாது.

* கூட்ட நெரிசல் காணப்படும் பூங்காக்கள், சந்தைகள் மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லக் கூடாது.

* இருமல், தும்மல் வந்தால் வெறும் கைகளோடு முகத்தை பொத்தக்கூடாது.

* கண்களையோ, முகத்தையோ அல்லது மூக்கையோ தொடக்கூடாது.

* சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.

* வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆஸ்பத்திரிகளுக்கு செல்லக்கூடாது. முடிந்த அளவுக்கு தொலைபேசி மூலமாக ஆலோசனைகளை பெறவேண்டும்.

* குடும்ப உறுப்பினர்களையோ அல்லது உறவினர்களையோ வீட்டுக்கு அழைக்கக்கூடாது.



மூத்த குடிமக்களை கவனிப்பவர்கள் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை வருமாறு:

* மூத்த குடிமக்களுக்கு உதவி செய்யும் முன்பு கைகளை நன்கு சுத்தமாக கழுவவேண்டும்.

* மூத்த குடிமக்களை கவனித்துக்கொள்ளும்போது மூக்கு மற்றும் வாயை டிஷ்யூ பேப்பர் மற்றும் துணியால் பொத்திக்கொள்ளவேண்டும்.

* அடிக்கடி பயன்படுத்தப்படும் தரையை நன்கு சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஊன்றுகோல், நடப்பதற்கு உதவும் உபகரணங்கள், சக்கர நாற்காலிகளை சுத்தமாக வைக்கவேண்டும்.

* மூத்த குடிமக்கள் கை கழுவுவதற்கு உதவி செய்யவேண்டும்.

* மூத்த குடிமக்கள் சரியான அளவு உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யவேண்டும்.

செய்யக்கூடாதவை:

* மூத்த குடிமக்களை முழுமையாக படுக்கையில் வைத்திருக்கக்கூடாது.

* பொழுதுபோக்குகளை புதுப்பிக்கவேண்டும்

* கைகளை கழுவாமல் மூத்த குடிமக்களை தொடக் கூடாது.

உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் செய்யக்கூடியவை:

மனநலம் பாதிப்பு மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மூத்த குடிமக்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை வருமாறு:

* வீட்டில் இருக்கும் உறவினர்களை தொடர்புகொள்ளவேண்டும்.

* கூட்டம் சேர்ப்பதை தவிர்த்துவிட்டு, அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி தொடர்பு கொள்ளலாம்.

* அமைதியான சுற்றுச்சூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

* வாசித்தல், இசையை ரசித்து கேட்டல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பழைய பொழுதுபோக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

* மிகவும் நம்பத்தகுந்தவர்கள் சொல்லும் தகவலை மட்டுமே நம்பவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

* சலிப்பு, தனிமையில் இருக்கிறோம் என்பதற்காக புகையிலை, மது மற்றும் பிற போதை வஸ்துகளை பயன்படுத்தக்கூடாது.

* ஏற்கனவே மன நோய் இருந்தால் 08046110007 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.

* மனநிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ, அதிகமாக மயக்கம் வந்தாலோ, சரியாக பேச முடியவில்லை என்றாலோ உதவி எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.

* தனிமைப்படுத்திக்கொள்ளக்கூடாது.

* அறையில் தன்னை அடைத்துவைக்கக்கூடாது.

* உணர்வுப்பூர்வமான செய்திகளையோ அல்லது சமூக ஊடகங்களின் பதிவுகளையோ பின்தொடரக்கூடாது.

* ஆதாரப்பூர்வமற்ற செய்திகள் மற்றும் தகவல்களை பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது.
Tags:    

Similar News