லைஃப்ஸ்டைல்
உடலையும் மனதையும் பாதிக்கும் உணவுப்பழக்கம்

உடலையும் மனதையும் பாதிக்கும் உணவுப்பழக்கம்

Published On 2020-04-03 08:36 GMT   |   Update On 2020-04-03 08:36 GMT
உணவு, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது. உணவில் இருக்கும் சத்துக்கள்தான் நமது உடலை இயக்கு கின்றன. அதற்காக நாம் சமச் சீரான சத்துணவை போதுமான அளவில் மட்டும் சாப்பிட வேண்டும்.
உங்கள் பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தை வைத்தே அவர்களது மனம் தெளிவாக இருக்கிறதா? என்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம். உங்கள் வீட்டின் சமையல் அறை அருகில், ‘டைனிங் ஹால்’ வைத்திருப்பீர்கள். அதுதான் உங்கள் பிள்ளைகளின் மனநிலையை அறியும் ‘மனோதத்துவ அறை’ என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

தாய்மார்களாகிய நீங்கள் சமைத்துக்கொடுக்கும் உணவை உங்கள் பிள்ளைகள் டைனிங் ஹாலில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடும் அளவை வைத்து அவர்கள் மனநிலை எப்படி இருக்கிறது? குழம்பிய நிலையில் இருக்கிறார்களா? தெளிவான நிலையில் இருக்கிறார்களா? என்பதை உங்களால் கண்டறிந்துவிட முடியும். குழம்பிய நிலையில் இருந்தால் அதற்கான காரணத்தையும் கண்டுபிடித்துவிட முடியும்.

வீட்டில் இருக்கும் டைனிங் ஹால் மட்டும் அல்ல, அவர்கள் மாணவிகள் என்றால் கல்வி நிலையத்தில் உள்ள கேன்டீன்களில், வேலைபார்ப்பவர்கள் என்றால் அங்குள்ள உணவகங்களில் அவர்கள் சாப்பிடும் முறையை வைத்தும், அவர்களது மனநிலையை தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

உங்கள் நண்பர்கள், தோழிகளில் சிலர் உங்களிடம் ‘நான் ரொம்ப டென்ஷனாக இருக்கிறேன். அதனால் ஏதாவது ஓட்டலில் சென்று சாப்பிடலாம் என்று நினைக்கிறேன்’ என்று உங்களிடம் கூறியிருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர் யாருடனாவது நீங்கள் ஓட்டலுக்கு சென்றிருந்தால், அவர் ஓட்டலில் உணவருந்திய காட்சியை மனக்கண் முன் கொண்டுவாருங்கள். அவர் வழக்கத்தைவிட அதிகமாக சாப்பிட்டிருப்பார். சாப்பிட்டதும் தனது டென்ஷன் தீர்ந்துபோய்விட்டது என்பார். அதோடு விடமாட்டார், அடிக்கடி தனக்கு டென்ஷன் ஏற்படுவதாக கூறிக்கொண்டு அவ்வப்போது உணவு சாப்பிட ஆரம்பித்துவிடுவார். மட்டுமின்றி, எப்போதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருந்தால்தான் தனது மனம் நிம்மதியாக இருக்கிறது என்றும் சொல்வார். இந்த மாதிரியான பழக்கம் ஒருவரிடம் இருந்துகொண்டிருந்தால் அவர் ‘ஈட்டிங் டிசார்டர்’ என்ற பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

உணவு, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது. உணவில் இருக்கும் சத்துக்கள்தான் நமது உடலை இயக்கு கின்றன. அதற்காக நாம் சமச் சீரான சத்துணவை போதுமான அளவில் மட்டும் சாப்பிட வேண்டும். ஆனால் ஈட்டிங் டிசார்டர் கொண்டவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் தீர்வுகாண முடியாத அளவுக்கு மனஅழுத்தம் தோன்றும்போதெல்லாம், உணவுப் பொருட்களை தின்று தீர்ப்பார்கள். மனஅழுத்த சிந்தனை, அவர்கள் சாப்பிடும் நேரத்தில் அந்த உணவின் சுவையை நோக்கி திரும்பும். அதன் மூலம் தனக்கு மனஅழுத்தம் குறைவதாக அவர்கள் தவறாக கருதிக்கொண்டு, தோன்றும்போதெல்லாம் உணவருந்தி சாப்பாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். அது விரைவில் அவர்கள் உடல் நலனுக்கு அச்சுறுத்தலாகிவிடும்.

அதிகமாக சாப்பிடுவது மட்டும் ஈட்டிங் டிசார்டர் அல்ல. சிலர் சாப்பிடவே விரும்பமாட்டார்கள். உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க முயற்சிப்பார்கள். இவர்களும் அந்த வகையை சேர்ந்தவர்கள்தான். இந்த இருவகையினரும் உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் 18 முதல் 28 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த ஈட்டிங் டிசார்டர் பற்றி உலக அளவில் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள். என்னென்ன காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். உறவுச் சிக்கல்கள், காதல் தோல்வி, வேலையில் ஏற்படும் இழப்புகள், தோல்வி மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய கவலை, பொருளாதார சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் இந்த ‘முரண்பட்ட உணவுப்பழக்கம்’ ஏற்படுகிறது. பாரம்பரியமாகவே இந்த பாதிப்பிற்கு ஒரு சிலர் ஆளாகுவதும் உண்டு. தற்போது கொரோனா பீதி உலகையே ஆட்டிப்படைக்கிறது. பயத்தினால் உருவான அந்த மனஅழுத்தத்தாலும் நிறைய பேர் ஈட்டிங் டிசார்டருக்கு உட்பட்டிருக்கிறார்கள்.

இப்போது பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் மனக்கட்டுப்பாட்டின் மீதே சந்தேகம் கிளம்பியிருக்கிறது. ‘சுவையான உணவு என்றால் கட்டுப்பாடு இன்றி நிறைய சாப்பிட்டுவிடுவோம். அதனால் உடல் எடை அதிகரித்துவிடும்’ என பயப்படுகிறார்கள். அவர்கள் தாங்கள் ஒல்லியாகவே இருக்கவேண்டும் என்பதற்காக படாதபாடுபடுகிறார்கள். ஒரு ஸ்பூன் அளவு உணவு உள்ளே அதிகமாக போய்விட்டாலும் அதை எப்படி வெளியேற்றுவது என்றும் சிந்திக்கிறார்கள். அதற்காக ஒருநாள் முழுக்க பட்டினியும் கிடக்கிறார்கள். இதுவும் காலப்போக்கில் ஒருவித மன அழுத்த பாதிப்பாக உருவாகிவிடும். அதற்கு ‘அனோரெக்சியா நெர்வோசா’ என்று பெயர்.

உங்கள் மகள்களும் இதுபோன்ற மனநிலையில் இருக்கலாம். அதனால் டைனிங் ஹாலில் அவர்கள் உணவு சாப்பிடும்போது கவனியுங்கள். நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, உணவை தவிர்ப்பது, எப்போது பார்த்தாலும் உடல் எடையை பற்றியே பேசிக்கொண்டிருப்பது, ஒவ்வொரு நாளும் பலமுறை மெஷினில் ஏறி நின்று எடையை கணக் கிட்டுவிட்டு ‘கால் கிலோ கூடிவிட்டதே.. அரை கிலோ கூடிவிட்டதே’ என்று அங்கலாய்ப்பது.. போன்ற செயல்பாடுகள் இருந்தால் உங்கள் மகள்கள் மீது அக்கறை கொள்ளுங்கள். இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்படலாம்.

உணவை அறவே தவிர்ப்பவர்களில் முதலிடத்தில் பிரபலமான பெண்மணிகள் இருக்கிறார்கள். நடிகைகள், மாடலிங் போன்ற துறைகளில் இருக்கும் பெண்களிடமும் இந்த பிரச்சினை உண்டு. இப்போது சமூக வலைத்தளங்களே கதி என்று கிடக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். என்னென்ன உணவுகள் சாப்பிடுவது தங்கள் உடலுக்கு ஏற்றது என்று அவர்கள் மருத்துவர்களிடமோ, உணவியல் நிபுணர்களிடமோ ஆலோசனை கேட்பதில்லை. மாறாக சமூக வலைத்தளங்களில் யார்யாரோ பதிவு செய்து வைத்திருக்கும் ஆலோசனைகேட்டு அதனை பின்பற்ற முயற்சிக்கிறார்கள். அது சரியான அணுகுமுறை அல்ல. அது உடலில் மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும்.

சில நடிகைகள் தங்கள் சமூக வலைத்தள பதிவுகளில், ‘பிடித்தமான உணவுகளை தாங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாகவும்- அதை ஈடுசெய்யும் விதத்தில் மறுநாள் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அதிக கலோரிகளை செலவிட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதாகவும்’ பதிவிடுகிறார்கள். இது எல்லோருக்கும் பொருந்தாது. பெண்கள் தங்கள் உடலின் தாங்கும் சக்திக்கு ஏற்பதான் உடற் பயிற்சி செய்யவேண்டும். உடலை வருத்தும் விதத்தில் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டால் உடலில் இருக்கும் கொழுப்புகள் அதிகமாக வெளியேறி தசை பலவீன மாகிவிடும். பிரபலங்கள் தங்களுக்கென்று தனியாக உடற்பயிற்சி ஆலோசகரையும், உணவியல் ஆலோசகரையும் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் அவர்களது உடலுக்கு ஏற்ற உணவையும், உடலுக்கு ஏற்ற பயிற்சியையும் செய்கிறார்கள். அதனால்தான் அவர்களால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முடிகிறது. அதை சராசரி பெண்கள் பின்பற்றுவது சரியாக இருக்காது.

சில பிரபலங்கள் ‘அதிகமாக சாப்பிட்டுவிட்டு, ஏன் கஷ்டப்பட்டு உடற் பயிற்சி மேற்கொள்ளவேண்டும். அதற்கு பதிலாக சாப்பிட்ட உணவை அப்படியே சிறிது நேரத்தில் வாந்தி எடுக்கவைத்துவிடலாமே’ என்று கருதி, ஏதாவது ஒருவிதத்தில் வாந்தி மூலம் உணவை வெளியேற்றி விடுகிறார்கள். இந்த மனநிலை கோளாறுக்கு ‘புலிமியா நெர்வோசா’ என்று பெயர். இந்த மோசமான செயல்பாடு அவர்களது உடல்நிலையை பெருமளவு பாதிக்கும்.

தொடர்ச்சியாக வேலை செய்துகொண்டிருப்பவர்கள் அதில் ஒரு ‘பிரேக்’ விடுவதற்காக, ஒருகப் காபி பருகுவதற்காக இருக்கையில் இருந்து எழுந்து வெளியே வருவார்கள். அந்த பழக்கம் அவர்களை அடிக்கடி இருக்கையில் இருந்து எழவைத்து அவ்வப்போது காபி பருகும் மனநிலைக்கு கொண்டுசென்றுவிடும். பின்பு அளவுக்கு அதிகமாக காபி பருகிக்கொண்டே இருப்பார்கள். ஒரு கட்டத்தில் ‘காபி பருகாவிட்டால் மனதுக்கு என்னவோபோல் இருக்கிறது’ என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள். இவர்கள் ‘ஸ்ட்ரெஸ் ஈட்டிங்’ பிரிவினராகும். இவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போதெல்லாம் காபி, டீ, பருகிக்கொண்டே இருப்பார்கள்.

இந்த மாதிரியான முரண்பட்ட உணவுப் பழக்கவழக்கங்கள் இளம் பெண்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. அதனால் தாய்மார்கள் தங்கள் வீட்டு ‘டைனிங் ஹாலுக்கு’ அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும். அப்போது மகள் சாப்பிடும் முறையையும், சாப்பிடும் உணவின் அளவையும் பெற்றோர் கண்காணிக்கவேண்டும். நீங்கள் ஆழ்ந்து கவனித்தால் அவர்களது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்து சரிசெய்துவிடலாம்.

முந்தைய காலங்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை நடைமுறையில் இருந்தது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும்போதே குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், சாப்பிடும் இளசுகளின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சாப்பிட்டு முடித்ததும், சம்பந்தப்பட்டவரை தனியாக அழைத்து ‘உன் மனசு சரியில்லை போன்று தெரிகிறதே.. என்ன விஷயம் சொல்லு..’ என்று கேட்டு, அதை சரிசெய்யும் முயற்சிகளில் இறங்கிவிடுவார்கள். அந்த பழைய வழக்கத்தை மீண்டும் கொண்டுவரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

கட்டுரை: முனைவர் ஜெ.தேவதாஸ்,

உணவியல் எழுத்தாளர், சென்னை.
Tags:    

Similar News