லைஃப்ஸ்டைல்
காபி குடிக்க உகந்த நேரம்

காபி குடிக்க உகந்த நேரம்

Published On 2020-01-07 07:43 GMT   |   Update On 2020-01-07 07:43 GMT
காபி குடிக்கவும் உகந்த நேரம் இருக்கிறது, என்கிறது ஆராய்ச்சி. அந்த ஆய்வில் எந்த நேரத்தில் காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறியுள்ளது.
காலையில் காபியில் கண் விழித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிந்தது போல இருக்கும். காபி குடிப்பது நல்லதா, கெட்டதா என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும், காபி பிரியர்கள் இல்லாத வீடுகளே கிடையாது. சோம்பலைப் போக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், தலைவலியை போக்கவும் என பலவிதமான காரணங்களுக்காக காபி குடிப்பவர்கள் உண்டு. இன்றோ காபி குடிப்பது என்பது ஆரோக்கிய சூழலை எல்லாம் தாண்டி அரட்டை போல் அது ஒரு வழக்கமாகிவிட்டது.

நகர்ப்புறங்களில் விதவிதமாகத் தோன்றும் காபி ‘ஷாப்’களை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சூடான காபி, குளிரான காபி, வறக்காபி என காபியில் பலவிதங்களும் வந்துவிட்டன.

இந்த காபி புராணம் இப்போது எதற்கு என்றுதானே நினைக்கிறீர்கள்...?

விஷயம் இருக்கிறது...

காபி குடிக்கவும் உகந்த நேரம் இருக்கிறது, என்பதே ஆராய்ச்சியாளர்களின் பதில். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஸ்டீபன் மில்லர் என்ற ஆராய்ச்சியாளர் காபி தொடர்பாக மெகா ஆய்வை நடத்தினார். அந்த ஆய்வின் முடிவில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை காபி குடிப்பது நல்லதல்ல என்று அவர் கூறி இருக்கிறார். அன்றாட நடவடிக்கைகளுக்காக உடம்பில் சில ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவற்றில் ஒன்று கார்ட்டிசால்.

இந்த ஹார்மோன்தான் நமது சுறுசுறுப்புக்கும் விழிப்புணர்வுக்கும் காரணம். இந்த ஹார்மோன் காலை 8 முதல் 9 மணி வரைதான் சுரக்குமாம். அந்த நேரத்தில் நம்முடைய நாளை சுறுசுறுப்பாகத் தொடங்க காபி குடிப்பது வீணாகிவிடும். அந்தச் சுரப்பை இன்னும் அதிகப்படுத்திவிடும் என்றும் சொல்லியிருந்தார்.

கார்ட்டிசால் சுரப்பு மிகக் குறைவாக இருக்கும் நேரமான காலை 9.30-11.30 மணிக்குள்ளும், மாலை 1.30-5.00 மணிக்குள் காபி குடித்தால் பிரச்சினை இல்லை என்றும் மில்லர் கூறியிருந்தார். இந்த ஆய்வை ஏற்பதா, இல்லையா என்ற குழப்பம் ஆய்வாளர்களிடையே இருந்தது. இந்நிலையில் காபி ஆய்வை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார் மில்லர். இதனையடுத்து காபி பிரியர்கள் பலரும் காபி குடிக்கும் நேரத்தை மாற்றத் தொடங்கிவிட்டார்கள்.
Tags:    

Similar News