லைஃப்ஸ்டைல்

கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்..

Published On 2018-05-28 02:53 GMT   |   Update On 2018-05-28 02:53 GMT
கால்லீரலை பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான, சமச்சீரான உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கல்லீரலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகள் குறித்து பார்ப்போம்.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், கல்லீரல் நோய் பாதிப்பால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது. கொடிய மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக கல்லீரல் நோய்கள் அமைந்திருக்கின்றன.

உடலின் செரிமான மண்டலத்தின் முக்கிய அங்கமாக கல்லீரல் விளங்குகிறது. கழிவு பொருட்களை வெளியேற்றுவதிலும், ரத்தத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை பாதுகாப்பதற்கு ஆரோக்கியமான, சமச்சீரான உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். கல்லீரலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகள் குறித்து பார்ப்போம்.

பீட்ரூட், அதிக அளவில் பீட்டோ கரோட்டின் நிரம்பப்பெற்றது. இது கல்லீரலின் நலனுக்கு அவசியமானது. அடிக்கடி உணவில் பீட்ரூட்டை சேர்ப்பதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக பராமரித்து வரலாம்.

பச்சை இலை கொண்ட காய்கறிகளில் இருக்கும் குளோரோபில் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை படைத்தவை. அதனால் கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை இலை காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.



‘வால்நெட்’ பருப்பு வகைகள் குளுட்டாதையோன் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டவை. அவை கல்லீரலை சுத்தப்படுத்தும் பணிகளையும் செய்யக்கூடியவை.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கேரட் உதவுகிறது. இதில் குளுட்டாதையோன் அதிகம் கலந்திருக்கிறது. பீட்டோ கரோட்டீனும் கலந்திருக்கிறது. இவை கல்லீரலுக்கு நலம் சேர்ப்பவை.

மஞ்சளும் கிருமி நாசினியாக செயல்பட்டு கல்லீரலை காக்கும் தன்மை கொண்டது. கல்லீரல் நோய் தொற்றுக்கு ஆளாகாமலும், வைரஸ் போன்ற நுண்ணுரியிகளின் தாக்குதலால் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கும் ஆற்றல் பெற்றது. அதனால் தினமும் சிறிதளவு மஞ்சளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சமையலில் அடிக்கடி ப்ராக்கோலி சேர்த்து வருவதும் அவசியம். இது கல்லீரல் நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். 
Tags:    

Similar News