லைஃப்ஸ்டைல்

உண்ணா நோன்பு உடலுக்கு நல்லதா?

Published On 2017-07-11 09:09 GMT   |   Update On 2017-07-11 09:09 GMT
வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்பதால் உடல் பலம் குறைந்து போய் விடும் என்பது தவறான கருத்து. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று சொன்னார் ராமலிங்க அடிகளார். இதில் பசித்திரு என்பதை உண்ணா நோன்பைக் கூட எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக மக்கள் உபவாசம் என்ற பெயரில் உண்ணா நோன்பு இருக்கிறார்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் உண்ணா நோன்பு இருப்பதால் மற்ற 6 நாட்களிலும் உண்ட உணவுகளால் உடலில் சேரும் நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால் உணவு உண்பதை நிறுத்தி விட்டு பழங்கள், சிற்றுண்டிகள், பால், இனிப்பு ஆகியவற்றை உண்கிறார்கள். இதனால் நன்மைக்கு பதில் தீமையே விளைகிறது.

விரதம் இருக்கும் போது உடலின் சிறுநீரகம், குடல், தோல், நுரையீரல் ஆகியவற்றின் மூலம் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் வாரத்திற்கு ஒரு நாள் உடல் தன்னைத்தானே சுத்தமாக்கி தூய்மை அடையும். வாரத்தில் ஒருநாள் உபவாசம் இருப்பதால் உடல் பலம் குறைந்து போய் விடும் என்பது தவறான கருத்து.



பொதுவாக உபவாசம் இருப்பவர்கள் சிறிது பலவீனம் அடைவார்கள். உண்ணா நோன்பு இருக்கும் போது உடல் வெப்பம் அடையும். இந்த வெப்பத்தால் மலக்குடலில் உள்ள கழிவுப் பொருட்கள் இறுகி அவை வெளியேறும் போது வலி உண்டாகும். எனிமா எடுத்துக்கொள்ளும் போது வலி ஏற்படுவதில்லை.

உடலில் வெப்பநிலையும் பாதிக்கப்படுவதில்லை. ஒரு எந்திரத்தை நன்றாக சுத்தப்படுத்தி எண்ணெய் விட்ட பிறகு அது முன்பு இருந்ததை விட நன்றாக உழைக்கும்.

அதே போல் வாரம் ஒரு முறை உடலை சுத்தப்படுத்த விரதம் இருந்தால் உடல் எனும் எந்திரமும் புத்துணர்ச்சி பெற்று நன்றாக இருக்கும். உபவாசத்திற்குப் பின் வலிமையும், அழகும் புதிய வடிவில் பெருகுகிறது. பொதுவாக இயற்கை சிகிச்சை முறையில் உபவாசமே எந்த ஒரு நோய்க்கும் முதல் சிகிச்சையாக இருக்கிறது.
Tags:    

Similar News