லைஃப்ஸ்டைல்

இரவில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்

Published On 2016-12-26 04:22 GMT   |   Update On 2016-12-26 04:22 GMT
இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும். அந்த வகையில் எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
”காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு” என ஒரு பழமொழி உண்டு.

காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம். பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான்.

ஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும்.

என்ன சாப்பிட வேண்டும்?

உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

எவற்றைச் சாப்பிடக்கூடாது?

நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

எப்படிச் சாப்பிடுவது?

இரவு 7  8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். லேட் நைட்டில் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்னை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.

Similar News