லைஃப்ஸ்டைல்

பிஸ்கெட் சாப்பிடுபவரா நீங்க? அப்ப இத படிங்க

Published On 2016-11-30 08:25 GMT   |   Update On 2016-11-30 08:26 GMT
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் பிஸ்கெட். இதை அதிகம் சாப்பிடுவதால் நம் உடலில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்று. பிஸ்கெட். காலையில் சாப்பிட நேரம் இல்லாத சிலர் டீ, இரண்டு பிஸ்கெட் சாப்பிட்டாலே போதும் என்று நினைக்கிறார்கள். இளம்வயதில் எந்தப் பிரச்சனையும் தெரியாவிட்டாலும் நாளடைவில் வயிற்றுப்புண், செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்.

உடலில் சர்க்கரை அளவு குறைந்தாலும் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். ஆனால் மருத்துவ ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவது தவறான பழக்கம் ஆகும். சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் போன்றவை பிஸ்கெட்டில் அதிகம் இருக்கின்றன.

பிஸ்கெட் தயாரிப்பின்போது அதிக வெப்பநிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும்போது உருவாகும் இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.

இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதய நோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம். அப்படி, தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களை E223 என்பதுபோல நமக்கு புரியாத மொழியில் குறிப்பிட்டிருப்பதால், அது தெரிவதும் இல்லை.

கோதுமையில் இருக்கும் புரதச்சத்தான க்ளூட்டன் (Gluten) சிலரது உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது. இதனால் கோதுமையில் தயாராகும் பிஸ்கெட்டுகளால் பெரியவர்களுக்கு வாந்தி, பேதி, நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.

ஆதலால் எதை சாப்பிட்டாலும் அதன் நன்மை, தீமைகளை அறிந்து சாப்பிடுவது நல்லது.

Similar News