லைஃப்ஸ்டைல்

நாவற்பழத்தின் நன்மைகள்

Published On 2016-09-24 02:39 GMT   |   Update On 2016-09-24 02:39 GMT
நாவற்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
நாவற்பழம் நாம் அன்றாடம் சாப்பிடும் பழம் அல்ல. ஆனால் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ‘பி’ போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.

நாவற்பழத்தின் விதைகள் நீரிழிவு நோயைக் குணப்படுத்த வல்லவை. இதன் விதைகளை நிழலில் உலர்த்தித் தூள் செய்து, தினமும் காலை, மாலை இரு வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்து பட்டையை நன்கு நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, பின் அந்த தண்ணீரை ஒரு டம்ளர் சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்கவேண்டும். இவ்வாறு தினமும் இரண்டு வேளைகள் வீதம் 10 நாட்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு மாத விடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலை நிவர்த்திசெய்ய நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கவேண்டும்.

நாவல் மரத்தின் தளிர் இலைகளை நசுக்கிச் சாறு எடுத்து, ஒரு தேக் கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் பேதியைக் கட்டுப்படுத்தலாம்.

நாவல் மரத்தின் பட்டையை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்துப் பின் இதமான சூட்டில் வாய் கொப்பளித்து வரவேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் குடல்புண், தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

நாவற்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் வலுவடையும், இதய நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெறலாம். 

Similar News