உடற்பயிற்சி

குழந்தைகளுக்கான உடற்பயிற்சிகள்

Published On 2023-08-31 10:07 GMT   |   Update On 2023-08-31 10:07 GMT
  • சிறு வயதிலேயே பல குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது.
  • நாளடைவில் இது சர்க்கரை நோயாகவும் மாறி விடுகிறது.

இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்களே சரியான முறையில் தனது உடலை பார்த்து கொள்ளாத நிலையில், குழந்தைகளும் அதனையே பின்பற்ற தொடங்குகின்றனர். சிறு வயதிலேயே பல குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பது தான்.

இது போன்று செய்வதால் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் உண்டாகுகிறது. மேலும் நாளடைவில் இது சர்க்கரை நோயாகவும் மாறி விடுகிறது. இவற்றை தடுக்க மருத்துவர்கள் கூறும் இந்த எளிய உடற்பயிற்சிகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்று தந்து, செய்ய வைத்தால் போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடற்பயிற்சி என்றால் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண வீட்டு வேலைகள் மூலமாகவும் இவற்றை செய்யலாம். குறிப்பாக வீட்டை சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற சிறிய வேலைகளை குழந்தைகளை செய்ய சொல்லலாம். மேலும் வீட்டில் கலைந்துள்ள பொருட்களை அவர்களை அழகாக அடுக்கி வைக்க சொல்லலாம்.

வீட்டில் உள்ள படிக்கட்டுகளை உடற்பயிற்சிக்காக சிறப்பாக பயன்படுத்தலாம். தினமும் 10-15 நிமிடம் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்க சொல்லுங்கள். இது நல்ல பலனை தரும். குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் இது அமையும். இப்படி செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும், உடல் பருமன் ஆகாது.

குழந்தைகளை ஆரோக்கியமாக வைக்க உதவும் சிறந்த உடற்பயிற்சி நடனம் தான். எளிமையான நடன அசைவுகளை சொல்லி கொடுத்து அவர்களை ஆட சொல்லலாம். இது உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். பெற்றோர்கள் ஆரம்பத்தில் சிறிய சிறிய நடன அசைவுகளை சொல்லி கொடுத்து பிறகு குழந்தைகளை ஆட சொல்லலாம்.

ஒரு தட்டு வடிவிலான இலகுவான பொருளை கொண்ட விளையாட்டை 'ஃப்ரிஸ்பீ' என்று கூறுவார்கள். விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று அங்கு இந்த விளையாட்டை விளையாட சொல்லி தரலாம். இது குழந்தைகளுக்கு வேடிக்கையான விளையாட்டாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தை குழந்தைகள் சிறப்பாக வைத்து கொள்ள ஸ்கிப்பிங் சிறந்த பயிற்சியாகும். வீட்டின் மாடியில் ஜாலியாக ஸ்கிப்பிங் செய்ய சொல்லுங்கள். இது உடல் எடையை கூடாமல் வைக்கும், மேலும் தசையை வலுப்பெற செய்ய உதவும்.

குழந்தைகள் நல்ல மன வலிமையையும், உடல் வலிமையையும் பெறுவதற்கு யோகா செய்தல் வேண்டும். முதலில் சிறிய பயிற்சிகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். பிறகு அவர்களுக்கே இதன் மீது அதிக ஆர்வம் வந்துவிடும்.

மூளைக்கும், உடலுக்கும் தேவையான வேலையை நாம் தந்து வந்தாலே உடல் நலன் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் இவை இரண்டையும் சீரான நிலையில் வைக்க, பந்து எறிதல் விளையாட்டு நல்ல தேர்வாகும். இந்த விளையாட்டிற்கு பெற்றோர்களும் குழந்தைகளுடன் இருந்தால் நல்லது. ஒருவர் பந்தை தூக்கி எறிய மற்றவர் அதை பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும்.

Tags:    

Similar News