லைஃப்ஸ்டைல்
பார்ட்னர் உடற்பயிற்சி

பார்ட்னர் உடற்பயிற்சியில் கிடைக்கும் பலன்கள்

Published On 2021-03-20 02:26 GMT   |   Update On 2021-03-20 02:26 GMT
உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம்.
ஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம். இதையே பார்ட்னர் உடற்பயிற்சி (Partner Exercise) என்கிறார்கள்.

வாக்கிங் செல்வதோ, ஜிம்முக்கு வெயிட் டிரெயினிங் செல்வதோ எதுவாக இருந்தாலும் யாரேனும் ஒரு துணையுடன் இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும். யோகா கிளாஸ், இரண்டு பேர் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதுடன் இருவருக்கும் இடையில் உள்ள அன்பையும் வளர்க்கும்.

இருவரில் ஒருவர் மட்டும் வாக்கிங் போவது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது தடைபடும். சில நேரங்களில் சோம்பல்பட்டு பயிற்சியை தள்ளி வைப்போம் அல்லது விட்டுவிடுவோம். அதுவே பார்ட்னரோடு தொடர்ச்சியாக வாக்கிங் செல்லும்போது நாம் தள்ளி வைப்பதாக இருந்தாலும் அவர் கேட்டுக் கொள்வதாலோ அல்லது வற்புறுத்துவதாலோ நம் பயிற்சி தடைபடாது.

உடற்பயிற்சிகளையோ, யோகா பயிற்சிகளையோ பார்ட்னரோடு செய்தால் ஒருவர் தவறு செய்தால்கூட மற்றவர் சரி செய்துவிடுவார். சில நேரங்களில் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படலாம். பார்ட்னரோடு செய்யும்போது, ஒருவருக்கொருவர் பேலன்ஸ் செய்து பயிற்சிகளை மேற்கொள்வதால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.

இருவராக ஃபிட்னஸ் பயிற்சிகளைச் செய்யும்போது இலக்குகளை எளிதில் அடையலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 1 மாதத்திற்குள் 50 புஷ் அப் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தால் நீங்கள் மட்டும் செய்யும்போது களைப்பில் இலக்கை அடைய முடியாது. உங்கள் பார்ட்னரோடு செய்யும்போது அவர் உங்கள் இலக்கை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். அதுவே தூண்டுதலாக இருக்கும்.

மேலும், இருவருக்குள்ளும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதால், அதிக ஊக்கத்தோடு பயிற்சிகளில் ஈடுபடலாம். அதோடு, புதுப்புது பயிற்சிகளை முயற்சி செய்யவும் வழிவகுக்கும்தனியாக செய்யும்போது எளிதில் சோர்வடைந்து, இன்றைக்கு இதுபோதும் என்று நேரத்தை குறைத்துவிடுவோம். அதுவே இன்னொருவரோடு செய்தால் நேரம் போவதே தெரியாமல் விளையாட்டாக செய்ய ஆரம்பித்து விடுவோம்.

முக்கியமான விஷயம்… கணவன், மனைவி சேர்ந்து உடற்பயிற்சி செய்வதால், உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கும் துணைபுரியும் என்பது ஆய்வில் நிரூபணமான உண்மை. இன்றைக்கு ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்ள நேரம் இல்லாத நிலையில் இருக்கும் போது, உடற்பயிற்சி நேரத்தை உங்கள் இருவருக்குமான தனிப்பட்ட நேரமாக அமைத்துக் கொள்ளலாம். பெற்றோர்கள் இணைந்து உடற்பயிற்சி செய்வதை பார்க்கும் பிள்ளைகளும் தானாகவே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிடுவார்கள். பிறகென்ன, ஆரோக்கியம் விளையாடும் வீடாக உங்கள் இல்லம் மாறும்!’’
Tags:    

Similar News