பெண்கள் உலகம்
பெண்களின் உடல் எடையை குறைக்க வெயிட் லிப்டிங் உதவும்

பெண்களின் உடல் எடையை குறைக்க வெயிட் லிப்டிங் உதவும்

Published On 2021-03-16 07:43 IST   |   Update On 2021-03-16 07:43:00 IST
பெண்கள் உடல் எடையை குறைப்பதற்கு டிரெட்மில், ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற கார்டியோ பயிற்சிகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. வெயிட் லிப்டிங்கையும் தேர்ந்தெடுக்கலாம்.
`வெயிட் லிப்டிங்' எனப்படும் பளு தூக்கும் பயிற்சி ஆண்களுக்குத்தான் ஏற்றதாக இருக்கும் என்று பெரும்பாலான பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த பயிற்சி பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். விரைவாக உடல் எடையை குறைக்க உதவுவதோடு சிறந்த ஆரோக்கிய நன்மைகளையும் பளுதூக்கும் பயிற்சி வழங்கும். பெண்கள் உடல் எடையை குறைப்பதற்கு டிரெட்மில், ஜூம்பா, ஏரோபிக்ஸ் போன்ற கார்டியோ பயிற்சிகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. வெயிட் லிப்டிங்கையும் தேர்ந்தெடுக்கலாம்.

* ஆண்களை விட பெண்களுக்கு 6 முதல் 11 சதவீதம் வரை உடலில் கொழுப்பு அதிகம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் வழக்கமான உடற்பயிற்சிகளுடன் பளு தூக்குதல் போன்ற சற்று கடினமான பயிற்சிகளையும் மேற்கொண்டால் கொழுப்பு எளிதாக கரையும். உடல் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவும். பளு தூக்கும் பயிற்சி செய்துவந்தால் பயிற்சி நேரத்தில் மட்டுமின்றி உடல் ஓய்வில் இருக்கும்போதும் கலோரிகள் செலவாகிக்கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* பளு தூக்குதல் எலும்பு அடர்த்தியையும் அதிகரிக்கும். எலும்புகள் வலிமையாகும். வயது அதிகரிக்கும்போது உருவாகும் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும். வலுவான எலும்புகளும், பலமான தசைகளும் முழுஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் நடத்திய ஆய்வின்படி, ஏதாவதொரு உடற்பயிற்சியை மேற்கொள்ளும் 62 வயதுடைய பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் குறைவாக இருக்கிறது. மேலும் இதய நோய் உருவாகும் ஆபத்து 17 சதவீதம் குறைவாக இருக்கிறது. பல்வேறு வகையான இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தை குறைப்பதில் பளு தூக்குதல் போன்ற வலிமை வாய்ந்த பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவை குறைப்பதற்கும் காரணமாக இருக்கின்றன.

* பளு தூக்கும் பயிற்சிக்கு அதிக கவனம் மற்றும் செயல்வேகம் தேவை. மன அழுத்தம் மற்றும் பதற்றதை குறைப்பதற்கும் இந்த பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் உடற்பயிற்சியின்போது சுரக்கும் எண்டோர்பின் ஹார்மோன் மனநிலையை மேம்படுத்தும். இதனால் மனதில் அமைதி நிலவும்.

* வேலைகளை செய்து முடித்த பிறகு உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்க ஓய்வு தேவை. முக்கியமாக தூக்கமும் தேவை. பளுதூக்கும் பயிற்சி பெறுபவர்கள் ஆழ்ந்த தூக்கத்தையும் பெறுவார்கள்.

* உடலின் ஒட்டுமொத்த வலிமையை மேம்படுத்துவதற்கு பளு தூக்கும் பயிற்சி சிறந்ததாகும். பயிற்சியாளரின் ஆலோசனைப்படி முறைப்படி இதனை மேற்கொள்ளவேண்டும்.

Similar News