லைஃப்ஸ்டைல்
தசைகளை வலிமையாக்கும் `காலிஸ்தெனிக்ஸ்' பயிற்சி

தசைகளை வலிமையாக்கும் காலிஸ்தெனிக்ஸ் பயிற்சி

Published On 2021-03-15 02:21 GMT   |   Update On 2021-03-15 02:21 GMT
காலிஸ்தெனிக்ஸ் உடற்பயிற்சி(calisthenic exercises) கூடுதல் கலோரிகளை எரித்து தசைகளை கட்டமைப்பதற்கு உதவுகிறது. இந்த உடற்பயிற்சிக்கு எந்த உபகரணமும் தேவையில்லை.
தசைகளை வலிமையாக்குவதற்காக காலிஸ்தெனிக்ஸ் உடற்பயிற்சி செய்யப்படுகிறது. இது கூடுதல் கலோரிகளை எரித்து தசைகளை கட்டமைப்பதற்கு உதவுகிறது. காலிஸ்தெனிக்ஸ் என்ற சொல் ‘கல்லோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து உருவானது. இது அழகு மற்றும் வலிமையை குறிக்கும். இந்த உடற்பயிற்சிக்கு எந்த உபகரணமும் தேவையில்லை. வளையங்கள், பார்கள் போன்ற இலகுவான கருவிகளை பயன்படுத்தியும் இத்தகைய பயிற்சிகளை பெறலாம்.

தடகள விளையாட்டுத்துறை மற்றும் ராணுவத்தில் காலிஸ்தெனிக்ஸும் ஒரு பயிற்சியாக இருக்கிறது. அது உடல் வலிமையை மேம்படுத்தும் பயிற்சியாக கவனத்தில் கொள்ளப்படுகிறது. உடற்பயிற்சி உபகரணங்களை பயன்படுத்தாமல் உடல் அமைப்பு, வலிமை, தசையை மேம்படுத்துவதற்கு சாத்தியமான மற்றும் பயனுள்ள பயிற்சி முறையாக காலிஸ்தெனிக்ஸ் விளங்குவதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. ஜம்பிங், புஷ்-அப், குவாட், பர்பீஸ் போன்றவைகள் காலிஸ்தெனிக்ஸ் பயிற்சியில் அடங்கும். முதலில் நிபுணரின் வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

* இந்த பயிற்சி மேற்கொள்வதற்கு மைதானமோ, குறிப்பிட்ட உடற்பயிற்சி சாதனங்களோ தேவையில்லை. விரும்பும் எந்த இடத்திலும் செய்யலாம். அங்குள்ள பொருட்களையே உபகரணமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* இந்த பயிற்சி மேற்கொள்ளும்போது ஒரே நேரத்தில் உடலில் உள்ள பல தசைகள் இயங்க தொடங்கும். ஒட்டுமொத்த தசை குழுக்களுக்கும் சவாலான பயிற்சியாக அமையும். உதாரணமாக, காலிஸ்தெனிக்ஸ் பயிற்சியின் ஒரு அங்கமான கைகளை மடக்கியபடி குனிந்து நிமிர்ந்து கால்களுக்கு அழுத்தம் கொடுக்கும் ‘குவாட்’ எனும் பயிற்சியை மேற்கொள்ளும்போது அனைத்து கால் தசைகளும் வேலை செய்யும். அத்துடன் அனைத்து தசை பகுதிகளும் சம நிலையை அடையும். வலிமையும் பெறும். இது குறுகிய காலத்தில் சிறந்த உடல் வலிமையை பெற்றுத்தரக்கூடியது.

* உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், கட்டுடலுக்கான தசைகளை உருவாக்க விரும்புபவர்கள் அதற்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். அந்த உடற்பயிற்சி மூலம் தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்க வேண்டும். அதற்கு காலிஸ்தெனிக்ஸ் பயிற்சி பொருத்தமானது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கும் உதவும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Tags:    

Similar News