லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சி

ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்ப இந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யுங்க...

Published On 2021-01-08 02:25 GMT   |   Update On 2021-01-08 02:25 GMT
நம் உடல் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் அளவை மாற்றக்கூடிய உடற்பயிற்சிகளை (aerobic) செய்வது ஆழ்ந்து உறங்க உதவுகின்றன என்று கூறப்படுகிறது.
நம் தூக்கத்தில் உடற்பயிற்சிகள் குறிப்பாக இன்ன விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை வல்லுநர்கள் இன்னும் இறுதியாக கூற இயலவில்லை. ஆனால், தூக்கத்திற்கும் உடற்பயிற்சிக்கும் தொடர்பு இருக்கக்கூடிய விதங்களை ஓரளவுக்கு அவர்களால் வரையறுக்க முடிகிறது. நம் உடல் ஆக்ஸிஜனை பயன்படுத்தும் அளவை மாற்றக்கூடிய உடற்பயிற்சிகளை (aerobic) செய்வது ஆழ்ந்து உறங்க உதவுகின்றன என்று கூறப்படுகிறது. ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்யும்போது உடல் புத்துணர்வு பெறுகிறது. உடற்பயிற்சி செய்வதால் மனம் அமைதியடைகிறது. மனம் சாந்தமடைந்தால் நன்றாக உறங்க முடியும். உடற்பயிற்சி செய்வதால் உடலிலிருந்து வியர்வை வெளியேறுகிறது; அதுவும் நம் உறக்க நேரத்தைச் சீராகப் பராமரிக்க உதவுவதாக சில வல்லுநர்கள் கருதுகிறார்கள்.. 

நாம் உடற்பயிற்சி செய்யும் நேரமும் உறக்கத்தை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகாலையில் உடற்பயிற்சி செய்வோமானால், அதன் காரணமாக எழும் உடல் வெப்பம் இரவில் தூக்கத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. அதேவேளையில் படுக்கைக்குச் செல்வதற்குச் சற்று நேரம் முன்னதாக உடற்பயிற்சி செய்வதும் உறக்கத்தைத் தூண்டாது. அப்போது அட்ரீனலின் சுரப்பி வேலை செய்து உறக்கத்தைக் கெடுத்துவிடும். ஆகவே, இரவில் ஆழ்ந்து உறங்க விரும்புகிறவர்கள் உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் பிற்பகல் வேளையாகக் கருதப்படுகிறது.. 

பிற்பகலில் உடற்பயிற்சி செய்தால், உடல் வெப்பம் சிறிது சிறிதாக அதிகரித்து, நீங்கள் உறங்கக்கூடிய நேரத்தில் குறைய ஆரம்பிக்கும். பின் மாலைப்பொழுதில் உடற்பயிற்சி செய்வது உறக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும். உறங்கச் செல்வதற்கு சில மணி நேரம் முன்னதாக இலகுவான உடற்பயிற்சிகளைச் செய்வது ஆழ்ந்து உறங்க உதவும். எடை பயிற்சிகளை எப்போது செய்தாலும் உறக்கம் நன்றாக வரும். இதயத்திற்கான உடற்பயிற்சிகளைக் காட்டிலும் எடை பயிற்சிகள் நல்ல உறக்கத்தை அளிக்கின்றன. 

உறங்கச் செல்வதற்கு முன்னதாக செய்யக்கூடியது எடை பயிற்சிகளே! ஒவ்வொருவருடைய உடல் கடிகாரமும் (body clock) ஒவ்வொருவிதத்தில் செயல்படக்கூடியதாக இருக்கக்கூடும். உடற்பயிற்சி செய்யும் நேரத்தை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளுதல் பயன்தரும். அதிகாலையில் எழும்பக்கூடியவர்கள், காலை வேளையிலும் சற்று தாமதமாக எழும்பக்கூடியவர்கள் மாலை வேளையிலும் உடற்பயிற்சி செய்யலாம். நீங்கள் எப்போது உடற்பயிற்சி செய்தால் உறக்கம் நன்றாக வருகிறது என்பதை நடைமுறையில் பரிசோதித்து உடற்பயிற்சி செய்யும் நேரத்தை உங்கள் உடல் கடிகாரத்திற்கேற்ப ஒழுங்குபடுத்திக்கொள்வது நல்ல பயன் தரும். . 
Tags:    

Similar News