லைஃப்ஸ்டைல்
பிராணாயாமம்

மனம் அலைபாயாமல் தடுக்கும் பிராணாயாமம்

Published On 2020-12-21 02:14 GMT   |   Update On 2020-12-21 02:14 GMT
யோகாசனங்களின் மூலமாகவும், பிராணாயாமத்தைக் கொண்டும் அந்த உள்ளத்தின் கவன சக்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளலாம்.
நாம் பார்க்கும் காட்சிகளும், காதால் கேட்பவைகளும் நமது சிந்தனையைக் கவனமாக ஊன்ற விடாமல் தடுக்கின்றன. மற்ற புலன்களும் இப்படி கவனத்தைக் கலைக்கத் தூண்டுகின்றன. மனம் இப்படி அலைபாயாமல் தடுப்பதற்கு உதவும் ஹதயோகம், பிராணாயாமத்தையும் அதை ஒட்டிய மூச்சுப் பயிற்சிகளையும் குறிப்பிடுகிறது.

ஓர் அலாரம் கடிகாரத்தை எடுத்து உங்கள் முன்னால் வைத்துக் கொள்ளுங்கள். மற்ற சிந்தனை எதுவும் இன்றி, 'டிக் டிக்' என்ற அதன் சப்தத்தைக் கவனமாகக் கேளுங்கள். இப்படி நீங்கள் முயலும்போதே, பிற சிந்தனைகள் வந்து உங்கள் மனதை அலைக்கழிக்கக்கூடும். பிடிவாதமாக மனதைக் கட்டுப்படுத்தி இந்தப் பயிற்சியைத் தொடருங்கள். முதலில் சில நிமிடங்களுக்கு இப்படி இருக்க முடியும். பிறகு தொடர்ந்து இவ்வாறு இருக்கவும் பழகி விடுவீர்கள்.

இப்படி நீங்கள் கவனிக்க முயலும்போது என்ன நடக்கிறது? உங்களுக்கே தெரியாமல் உங்களுடைய மூச்சைக் கட்டுப்படுத்துகிறீர்கள். மிக மெதுவாகவும், அடக்கியும், ஆழ்ந்தும் மூச்சு விடுகிறீர்கள். இது எதைக் காட்டுகிறது? மனம் கவனமாக ஊன்றும்போது மூச்சு விடுவதின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

பிராணன் மனதில் அமர்ந்திருக்கிறது. ஆகையால் பிராணன் அசையும்போது மனம் இயங்குகிறது' என்று சிவ கீதை கூறுகிறது. "பிராணன் நீங்கும்போது மனம் செயலற்றுப் போகிறது. மனதைத் தேர் என்று சொன்னால், பிராணனை அதன் சாரதி என்று சொல்லலாம். இரண்டும் சேர்ந்து இயங்கும்போது உயிரோட்டம் தேர் போலச் சீராக ஓடுகிறது" என்று வசிஷ்ட முனிவர் ' யோக வாசிஷ்டத்' தில் கூறுகிறார்.

ஹதயோகத்தின் இரண்டு எழுத்துக்கள் 'ஹ' என்பதும், 'த' என்பதும் ஆகும். இவை சூரியனையும், சந்திரனையும் குறிக்கின்றன. பிராணவாயு சூரியனாகவும், அபானவாயு சந்திரனாகவும் இதில் குறிப்பிடப்படுகின்றன. உடலில் ஓடும் இந்தக் காற்றைக் கட்டுப்படுத்துவதும், வெளி உலகில் பரவி நிற்கும் காற்றுடன் இணைய வைப்பதும் பிராணாயாமத்தின் அடிப்படையாகும்.

பிராணன் என்பது உயிர்ச்சக்தி. அது உலகெங்கும் காற்றாகவும், நீராகவும், உணவாகவும் பரவிக் கிடக்கிறது. இப்படி வெவ்வேறு பொருட்களில் பரவி நிற்கும் பிராணசக்தியை, பிராணாயாமத்தின் மூலம் நாம் உடல் முழுவதும், எல்லா நரம்புகளிலும் நாடிகளிலும் இயங்க வைக்கிறோம். சிந்தனையிலிருந்து சாதாரண உடல் அசைவு வரை ஒவ்வொன்றையும் இது கவனித்துக் கொள்ளுகிறது. அதனாலேயே பிராணாயாமம் நம்முடைய உடலைப் பிணிகள் பீடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்று சொல்லுகிறோம்.

கடலில் அசைவு இருக்கும்போது அலைகள் எழுந்து வருவதைப் பார்க்கிறோம். பிராணனின் அசைவும் இவ்வாறே மூச்சாக வெளிப்படுகிறது. இதை அளவாக உள்ளே இழுப்பதும், சற்று தங்க வைத்து நிறுத்துவதும், பின் வெளியிடுவதும், இந்த அசைவைக் கட்டுப்படுத்துகின்றன. இப்படிப் பிராணாயாமம் செய்யும்போது, உடல் கட்டுப்பாட்டுக்கு வருகிறது. மூச்சுவிடுதல், ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவைகளுடன் தொடர்பு உள்ள நோய்களும் தாமாகவே நீங்கி விடுகின்றன.

பிராணாயாமப் பயிற்சியின் மூலம், நம் உடலில் பிராணசக்தி இயங்குவதையும் நாம் நுட்பமாக உணரமுடியும். உடலில் ஒரு பகுதியில் அது அதிகமாகவும், இன்னொரு பகுதியில் குறைவாகவும் இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். குறைவாக உள்ள பகுதிக்கு, அதிகமாக உள்ள பகுதியிலிருந்து திருப்பிவிடும் ஆற்றலையும் நாம் பெறமுடியும். இப்படி பிராணசக்தி சமச்சீராகப் பரவும்போது, உடம்பின் எல்லாப் பகுதிகளும் வலுப்பெறுகின்றன; சிந்தனையும் கூர்மையாக ஆகிறது.
Tags:    

Similar News