லைஃப்ஸ்டைல்
பிராணாயாமம்

உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர வைக்கும் பிராணாயாமம்

Published On 2020-11-25 02:29 GMT   |   Update On 2020-11-25 02:29 GMT
பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும்.
பிராணாயாமம் என்றால் மூச்சுப்பிடித்து செய்வது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், நம் அடிப்படை சக்திகளை கட்டுப்படுத்துவதே பிராணாயாமம். பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. சும்மா சில விஷயங்களைச் செய்வதன் மூலமே சக்தியை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் எடுத்து வரமுடியும். கட்டுப்பாடு என்றால் என் உடலில் மட்டுமல்ல, எனக்கு எங்கு வேண்டுமோ அங்கு சக்தியை செலுத்த முடியும், உலகில் எங்கு வேண்டுமானாலும் என் சக்தியை எடுத்துச் செல்லலாம். துவக்கத்தில் மூச்சினை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றோம். அதன்பின் சக்தியின் மீது முழுமையான ஆளுமை எடுத்து வருகிறோம்.

மூச்சு ஒரு கருவி மட்டுமே. சுவாசத்தை பயன்படுத்தாமலேயே சக்தியை நாம் கட்டுப்படுத்த முடியும். சக்திநிலையின் மீது கொண்டுவரும் கட்டுப்பாட்டிற்கும் மூச்சிற்கும் சம்பந்தம் இல்லை. ஆரம்பக் கட்டத்தில் சுவாசத்தை ஒரு கருவியாக நாம் பயன்படுத்துகிறோம். அதனால், பிராணாயாமம் என்பது காலையிலும் மாலையிலும் மட்டும் செய்யும் மூச்சுப் பயிற்சி மட்டுமல்ல. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயிற்சி செய்துவரும்போது நாள் முழுவதுமே உங்கள் சுவாசம் வித்தியாசமாக இருப்பதை உணர முடியும். இது சமயத்தில் உங்களுக்குள் நீங்கள் உணவினை இட்டாலும் அது வேறுவிதமாகச் செயல்படும். எல்லோரும் உண்கிறோம் ஆனால், எத்தனை பேரால் உணவினை உணர முடிகிறது? பெரும்பாலான மக்களுக்கு தன் நாவிலுள்ள சுவை மொட்டுக்களைத் தாண்டி உணவை உணர முடிவதில்லையே...

15 நிமிடம் சூன்ய தியானம் செய்துவிட்டு உணவு உண்டு பாருங்கள், உணவு வயிறு வரைச் செல்வதை உணரலாம். தியானம் செய்வதன் மூலம் தினசரி நீங்கள் உண்ணும் உணவினையே உங்களால் ஆழமாக உணர முடிகிறது. இதனால் உணவு வெறுமனே சதையாக மட்டும் ஆகிவிடாமல் சூட்சும சக்தியாக மாறும். பிராணாயாமம் செய்யத் துவங்கியவுடன் சிலருக்கு எடை குறையும் வேறு சிலருக்கோ எடை கூடும். இதை நீங்கள் கவனித்திருக்க முடியும்.

உங்கள் ஜீரண சக்தி மந்தமாக இருந்தால் உணவை உடலாக மாற்றக்கூடிய திறன் குறைப்பாட்டுடன் உள்ளது என்று அர்த்தம். பிராணாயாமப் பயிற்சி துவங்கியவுடன் ஜீரண சக்தி அதிகரிப்பதை உணரலாம். இதனால் உணவை சதையாக மாற்றும் உங்கள் திறனும் அதிகரிக்கலாம். உணவினை வெறுமனே கழிவாக வெளியேற்றும் தேவை குறைந்து போகலாம். 

இதனால் உங்கள் உடல் எடை கூடலாம். அதுவே உங்கள் ஜீரண மண்டலம் நன்றாக செயல்படும்போது நீங்கள் பிராணாயாமம் செய்யத் துவங்கினால் தாங்கள் உண்ணும் உணவு வேறொரு சூட்சும சக்தியாக உருமாற்றம் அடையும். இப்போது நீங்கள் உடல் எடையை இழக்கத் துவங்குவீர்கள். எத்தனை உணவு உண்டாலும் உடல் எடை குறைவதை கவனிக்க முடியும்.

உணவை மற்றொரு பரிமாணமாக மாற்றும் உங்கள் திறன் மிகுதியாக இருப்பதால் நீங்கள் எவ்வளவு உண்கிறீர்கள் என்பதற்கு கணக்கே இருக்காது. இதுசமயம் நீங்கள் அளப்பரிய சக்தியை சேகரிக்கத் துவங்குவீர்கள். உங்களுக்குள் தீவிர சக்தி செயல்படுவதால் உண்ணும் அத்தனை உணவும் எங்கு செல்கிறது என்றே தெரியாது. 

எது ஸ்தூல நிலையில் உள்ளதோ அது காணாமல் போக வாய்ப்பே இல்லை, ஒன்று அது சதையாக வேண்டும் அல்லது கழிவாக வெளியேற வேண்டும், அல்லவா? ஆனால் அப்படி இல்லாமல் உங்கள் சாதனாவினால் உணவு வேறொரு சக்தியாக மாறுகிறது. இதனால் நீங்கள் பிராணாயாமத்தை துவங்கும்போது ஒன்று உங்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறைந்துபோகும் இதனை நீங்கள் கவனிக்கலாம். ஒரு வகையில் பார்த்தால், நீங்கள் கேட்பது போலவே பிராணாயாமம் என்பது கடைசி மூச்சிற்கும் அதற்கு அப்பாலும் உள்ள பரிமாணத்திற்கு ஒரு தயாரிப்பு என்றே சொல்லலாம்.
Tags:    

Similar News