பெண்கள் உலகம்
சிரிப்பு யோகா

சிந்திக்க வைக்கும் சிரிப்பு யோகாவால் ஏற்படும் பலன்கள்

Published On 2020-11-21 07:35 IST   |   Update On 2020-11-21 07:35:00 IST
யோகாசன கலையில் உள்ள சில பயிற்சி முறைகளையும், சிரிப்பையும் கலந்து ‘சிரிப்பு யோகா’ என்று பெயர்சூட்டி உலகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபிங் யோகாவால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
யோகாசன கலையில் உள்ள சில பயிற்சி முறைகளையும், சிரிப்பையும் கலந்து ‘சிரிப்பு யோகா’ என்று பெயர்சூட்டி உலகம் முழுவதும் வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்கள் தினமும் ஒன்றுகூடி சில நிமிடங்கள் சிரித்து மகிழ்ந்து இந்த யோகாவை செய்தால், அவர்களுக்கு நாள் முழுவதற்கும் தேவையான உற்சாகம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

சிரிப்பு, உடலுக்கும் மனதுக்கும் ஏகப்பட்ட நன்மைகளை வழங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்த நன்மைகளை பலரும் பெறவேண்டும் என்பதற்காக டாக்டர் மதன் கடாரியா என்பவர் ‘சிரிப்போர் கிளப்’ என்பதனை தொடங்கினார். பிரபல மருத்துவரான இவர் 1995-ம் ஆண்டு நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு மும்பையில் உள்ள பூங்கா ஒன்றில் இந்த கிளப் நிகழ்ச்சிகளை நடத்த தொடங்கினார். பின்பு அது தொடர்ந்து நடந்தது. நாளுக்கு நாள் இதில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

சிரிப்பை வரவழைக்கும் சம்பவங்களையோ, நிகழ்வுகளையோ தினமும் அவர்கள் சொல்வார்கள். அதை கேட்டு எல்லோரும் சிரிப்பார்கள். அரை மணி நேரம் சிரித்துவிட்டு, கலைந்து செல்வார்கள்.

உற்சாகமாக இப்படி நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தாலும் சில வாரங்கள் கடந்ததும் சிரிப்பு கிளப்பில் சில சிக்கல்கள் எழுந்தன. தினமும் சொல்லும் அளவுக்கு அவர்களிடம் தமாஷ் கதைகள் இல்லாமல் போனது. அதனால் சிரிப்பு பற்றாக்குறை உருவானது. சிரிப்பில் வறட்சி ஏற்பட்டுவிட்டால் ஆட்கள் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்த டாக்டர் மதன் கடாரியா அதற்கு மாற்றுவழியை உருவாக்குவது பற்றி சிந்தித்தார்.

அப்போது அவர் சிரிப்பில் கூடுதலாக ஒரு விஷயத்தையும் கண்டறிந்தார். அதாவது ‘அருமையான தமாஷ் ஒன்றை கேட்டு இயற்கையாக விழுந்து விழுந்து சிரிப்பதற்கும்- தமாஷ் எதுவும் இல்லாமல் செயற்கையாக அதுபோல் சிரிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பலனைத்தான் தருகிறது’ என்பதை அவர் உணர்ந்து தெரிவித்தார்.

மறுநாளே தனது கிளப் உறுப்பினர்களிடம் ‘தமாஷை கேட்டு சிரிப்பு வரும் வரை காத்திருக்கவேண்டாம். எல்லோரும் சில நிமிடங்கள் செயற்கையாக கத்தியபடி சிரியுங்கள்’ என்றார். அடுத்த நிமிடமே எல்லோரும் சிரிக்க, அந்த வித்தியாசமான சிரிப்பு அங்கே புதிய சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. ஒவ்வொருவரும் சோர்ந்துபோகும் வரை சிரிப்பிலே உற்சாக கூச்சலிட்டார்கள். விதவிதமான கோணங்களில் சிரித்து மகிழ்ந்தார்கள்.

அதன் பின்பு டாக்டர் மதன் கடாரியா அந்த செயற்கை சிரிப்போடு சிலவிதமான யோகா பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள் போன்றவைகளை எல்லாம் கலந்து, முறைப்படுத்தி ‘சிரிப்பு யோகாவை’ உருவாக்கிவிட்டார். இதில் கலந்துகொள்கிறவர்களுக்கு ஆழ்ந்த சுவாசப் பயிற்சி கிடைக்கிறது. அதனால் இதில் நிறைய பேர் ஆர்வமாக கலந்துகொள்கிறார்கள். டாக்டர் மதன் கடாரியாவால் வடிவமைக்கப்பட்ட இந்த லாபிங் யோகா உலகில் பல்வேறு நாடுகளில் ஏராளமான குழுக்களால் தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

லாபிங் யோகாவால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு ஆரோக்கியமும், கட்டுக்கோப்பும் கிடைக்கும்.

- சிரிப்பு யோகா இதயத்திற்கு வலுசேர்க்கும் பயிற்சியாகவும் அமைகிறது. 10 நிமிடங்கள் இந்த யோகாசனத்தை மேற்கொண்டால் அரை மணி நேரம் சைக்கிளிங் செய்வதற்கான பலன் கிடைக்கிறது.

- உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆஸ்துமா, அலர்ஜி, வாதநோய்கள் குறையும்.

- உடல் இறுக்கமும், மன அழுத்தமும் குறையும்.

- உடலுக்கு நிம்மதியை தரும் எண்டோர்பின் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நேர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகும். மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும்.

- சிரிப்பு யோகா செய்பவர்களால் மனதை நன்றாக ஒருநிலைப்படுத்த முடியும். செயல்திறன் அதிகரிக்கும். அவர்களது தகவல் தொடர்புதிறனும் மேம்படும்.

இவ்வளவு நன்மைகள் இருப்பதால், சிரிப்பு யோகாவை செய்து வாழ்க்கையை ரசித்து மகிழுங்கள்.

Similar News