லைஃப்ஸ்டைல்
ஜம்பிங் ஜாக்ஸ்

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Published On 2020-11-19 02:13 GMT   |   Update On 2020-11-19 02:13 GMT
கால்களையும், கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி துள்ளிக்குதிக்கும் ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியை மேற்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இதனை தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
கால்களையும், கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி துள்ளிக்குதிக்கும் ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியை மேற்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவாக பலன் தேடித்தரும். ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை விரைவாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதற்கு விருப்பம் இல்லாதவர்களும் எளிதாக பழகிவிடலாம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

முதலில் சமதள பரப்பில் கால்களை நேராக நிமிர்த்தியபடி நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியை ஒட்டியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கால்களை தரையில் அழுத்தியபடி துள்ளிக்குதிக்க வேண்டும். அதேவேகத்திற்கு கைகளை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். படிப்படியாக குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கால்களை நன்றாக விரித்துக்கொண்டு உற்சாகமாக துள்ளிக்குதிக்க வேண்டும். அப்போது கைகளையும் நன்றாக உயர்த்தி மகிழ்ச்சியுடன் உற்சாக துள்ளல் போடலாம். துள்ளிக்குதிக்கும்போது காயம் ஏற்படாமல் இருக்க மெதுவாக தரையில் கால்களை வைக்க வேண்டும். நல்ல காலணிகள் அணிவதும் அவசியம். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுவிட்டு தினமும் சுயமாகவே ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கிவிடலாம்.

இதனை தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

இந்த பயிற்சிகள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. எலும்புகளை வலிமையாக்க உதவுவதோடு அவற்றை அடர்த்தியாக மாற்றவும் துணைபுரியும். எலும்பு தேய்மானத்தை தடுப்பதிலும், எலும்புப்புரை அபாயத்தில் உள்ளவர்களின் எலும்புகளை வலிமைப்படுத்துவதிலும் முக்கிய பங்குவகிக்கும். அன்றாட உடற்பயிற்சியுடன் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியும் செய்யலாம்.

70 கிலோ எடை கொண்ட ஒருவர் 39 நிமிடங்கள் ஜம்பிங் ஜாக்ஸ் செய்தால் 186 கலோரிகளை எரித்துவிடலாம். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

இந்த பயிற்சி உடல் வெப்பநிலை மற்றும் ஏரோபிக் திறனை அதிகரிக்க உதவும். மற்ற பயிற்சிகளை செய்வதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் வார்ம் அப் பயிற்சியின் ஒரு அங்கமாக ஜம்பிங் ஜாக்ஸ் அமைந்திருக்கிறது.

பெரும்பாலான ஏரோபிக் பயிற்சிகள் மனநிலையை மேம்படுத்துவதிலும், மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. அதேவகையை சேர்ந்த ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகமாக வெளிப்படும். அதனால் மனம் இலகுவாகும்.

நீங்கள் சரியாக உடற்பயிற்சி செய்கிறீர்களா அல்லது அதிகமாக அழுத்தம் கொடுக்கிறீர்களா என்பதை இதய துடிப்பு வெளிப்படுத்திவிடும். இதயத் துடிப்பை அதிகரிக்கும் பயிற்சிகள் இதயத்திற்கு நல்லது. ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி இதயத் துடிப்பை விரைவாக உயர்த்தும். அதேவேளையில் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு திரும்பவைத்து சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.

வாரத்தில் 150 நிமிடங்கள் ஏரோபிக் பயிற்சி மேற்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஏரோபிக் பயிற்சிகள் ரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகின்றன. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன. அதனால் ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

முகுதுவலி, எலும்பு தொடர்பான பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.
Tags:    

Similar News