லைஃப்ஸ்டைல்
உடல் எடையை குறைக்க சிரமப்படுபவர்களுக்கு ஏரோபிக்ஸ் சிறந்த தேர்வு

உடல் எடையை குறைக்க சிரமப்படுபவர்களுக்கு ஏரோபிக்ஸ் சிறந்த தேர்வு

Published On 2020-11-16 02:15 GMT   |   Update On 2020-11-16 02:15 GMT
ஜிம், ஜாக்கிங் சென்று சலிப்புக்கு ஆளாகுபவர்கள் ஏரோபிக்ஸ் நடனத்தை தேர்வு செய்யலாம். ஏரோபிக்ஸ் என்பது வேகமான நடன பாணியாகும். சில நிமிடங்களுக்குள்ளாகவே ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் நடனத்திற்கு இசைந்து கொடுக்கும்.
உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான நேரமோ, உடற்பயிற்சி செய்வதற்கு ஆர்வமோ இல்லாதவர்கள் கூட தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு விரும்புகிறார்கள். உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணுவதற்கு நடனம் மீது நாட்டம் கொள்கிறார்கள். உற்சாகத்துள்ளல் போட வைக்கும் நடன அசைவுகளை ஈடுபாட்டோடு கற்கிறார்கள்.

அதனை தங்களுக்கு சவுகரியமான உடற்பயிற்சியாகவும் மாற்றிக்கொள்கிறார்கள். அத்தகைய நடன வரிசையில் இணைந்திருக்கிறது ஏரோபிக்ஸ் நடனம். இது உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகவும் பார்க்கப்படுகிறது. ஒலிக்கும் இசையின் தாளத்திற்கு ஏற்ப கடினமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி உற்சாக துள்ளல் போட வைத்துவிடும். ஒட்டுமொத்த உடலுக்கும் சிறந்த உடற்பயிற்சியாகவும் மாறும். ஜிம், ஜாக்கிங் சென்று சலிப்புக்கு ஆளாகுபவர்கள் ஏரோபிக்ஸ் நடனத்தை தேர்வு செய்யலாம்.

ஏரோபிக்ஸ் என்பது வேகமான நடன பாணியாகும். சில நிமிடங்களுக்குள்ளாகவே ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் நடனத்திற்கு இசைந்து கொடுக்கும். அதனால் குறுகிய காலகட்டத்திற்குள்ளாகவே சோர்வு எட்டிப்பார்க்கும். அதேவேளையில் உடல் வலிமை பெறுவதை உணர முடியும். சகிப்பு தன்மையையும் அதிகரிக்க செய்யும். உடல் ஆற்றல் திறனும் மேம்படும். ஒட்டுமொத்த உடல் இயக்க செயல்பாடுகளும் அதிகரிக்க தொடங்கும்.

உடல் பருமன் பிரச்சினைக்கு ஆளாகி, உடல் எடையை குறைக்க சிரமப்படுபவர்களுக்கு ஏரோபிக்ஸ் நடனம் சிறந்த தேர்வாக இருக்கும். உடலின் அனைத்து தசைகளையும் உற்சாகத்துள்ளல் போட வைத்துவிடும். கலோரிகளையும் வேகமாக எரிக்க முடியும். உடலில் உள்ள கொழுப்பும் கரைய தொடங்கும்.

ஏரோபிக்ஸ் நடனம் மேற்கொள்ளும்போது நுரையீரல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நடன அசைவுகளின் வேகம் அதிகரிக்கும்போது உடலுக்குள் ஆக்சிஜனின் தேவையும் அதிகரிக்கும். அதனை பூர்த்தி செய்ய, நுரையீரல் மற்றும் இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதனால் நுரையீரலின் செயல் திறன் அதிகரிக்கும்.

ஏரோபிக்ஸ் நடனம் தமனிகள், இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவு கிறது. இந்த நடனத்தை தவறாமல் செய்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

ஏரோபிக்ஸ் நடனத்தின் மற்றொரு நன்மை என்னவென்றால், மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை மேம்படுத்த வழிவகை செய்யும். தேவையற்ற பதற்றத்தையும் குறைக்க உதவும்.

இந்த நடன வடிவத்தை தொடர்ந்து கையாளும்போது உடல் தசைகள் பலப்படும். உடலும் வலுப்படும்.

ஏரோபிக்ஸ் நடனத்தை புதிதாக கற்பவர்கள் நடன அசைவுகளை கவனமாக வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்கள் ஆக்ரோஷமாகவோ, உற்சாகமாகவோ துள்ளல் போடுகிறார்கள் என்பதற்காக அவர்களுடன் போட்டிபோடக்கூடாது. நடன அசைவுகளை மிகைப்படுத்தாமல் செய்து பழக முயற்சி செய்ய வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் ஏரோபிக்ஸ் நடனம் கற்கும்போது மார்பு, தோள்பட்டை, தசை பகுதிகளில் கடும் வலி ஏற்படும்.

மூட்டுவலி, எலும்பு அடர்த்தி போன்ற எலும்பு தொடர்பான உடல்நலப் பிரச்சினை கொண்டவர்கள் ஏரோபிக்ஸ் நடனம் கற்பதற்கு முன்பு டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
Tags:    

Similar News