லைஃப்ஸ்டைல்
ட்ரெட்மில்லில் ஆனந்தமாய் ஓடுவோம்

ட்ரெட்மில்லில் ஆனந்தமாய் ஓடுவோம்... நலமாய் வாழ்வோம்...

Published On 2020-09-21 02:15 GMT   |   Update On 2020-09-21 02:15 GMT
ட்ரெட்மில்லில் நடப்பதால் நாம் எவ்வளவு தூரம் நடந்தோம்?, நம் உடல் செயல்பாடு எப்படி மாறுகிறது?, எவ்வளவு கலோரிகளை எரித்திருக்கிறோம்? என்பது போன்ற விஷயங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமாய் வாழவேண்டும் என்றால் உடலுழைப்பு வேண்டும் என்பது அவசியமானது. ஆனால் நாம் செய்யும் தினசரி வேலைகளில் போதுமான உடலுழைப்பு இல்லாததினால் உடற்பயிற்சிகள் இன்றியமையாததாக உள்ளது. துரித நடை பயிற்சி மற்றும் மிதமான ஓட்டம் என்பது இதயத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்தி உடலின் எல்லா பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை சீராகப் பரவச்செய்கிறது. இதனால் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான பிராணவாயு மற்றும் குளுகோஸ் கிடைக்கிறது. இதனால் ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சியோடு இயங்க ஆரம்பிக்கிறது. இதன் பயனாக உடலில் பல நோய்கள் தவிர்க்கப் படுவதுடன் நாம் நாள் முழுவதும் உற்சாகமாகவும், தெம்புடனும் இருக்க முடிகிறது.

ஆனால் எல்லோருக்குமே வெளியில் சென்று நடப்பதும், ஓடுவதும் கடினம். குறிப்பாக பெண்களுக்கு அதிகாலையிலும், மாலை பொழுதுகளிலும் வெளியில் நடக்கச் செல்வது சற்றே கடினம்தான். இம்மாதிரி சூழலில் நம் உதவிக்கு வருவதுதான் ட்ரெட்மில்.

ட்ரெட்மில்லில் உள்ள வசதிகள்

ட்ரெட்மில் நம் கால்களால் இயக்கக்கூடியது (மானுவல்) என்றும், மின்சாரத்தால் இயங்கக்கூடியது (எலக்ட்ரானிக்) என்றும் இரண்டுவகையில் கிடைக்கிறது. இதில் பொதுவாக மின்சாரத்தால் இயங்கக்கூடிய ட்ரெட்மில்லே சிறந்தது.

ட்ரெட்மில்லின் ஓடும் பகுதி குறுகலாக இல்லாமல் நல்ல அகலமாக இருப்பது அவசியம். ட்ரெட்மில்லின் சாய்வான அமைப்பு நாமாக தேர்வு செய்துக் கொள்ளக்கூடியதாகவும், தானாக அதுவே நம் வேகத்தை கணித்து அதற்கேற்றாற் போல் சாய்வை அமைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருவகையில் கிடைக்கிறது. இது அவரவரின் தேவைக்கேற்பவும், விலையை பொருத்தும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

நாம் நடக்கும் போது நம் உடலின் அசைவுகளினால் ஏற்படும் மாற்றங்களை கணித்துச் சொல்க்கூடிய கருவிகளும் இதில் பொருத்தப்பட்டிருக்கும். இதய துடிப்பின் அளவு, உடற்பயிற்சியினால் நாம் எரித்த கலோரிகளின் அளவு, நம் உடல் எடை மற்றும் உயரத்திற்கான விகிதம் (பி.எம்.ஐ.) மற்றும் நாடியின் அளவை இந்த கருவி துல்லியமாக காட்டும். இந்த அளவுகளுக்கேற்ப நாம் நம் நடைபயிற்சியின் நேரத்தையும், வேகத்தையும் கூட்டுவதோ, குறைப்பதோ செய்துக் கொள்ளலாம்.

ட்ரெட்மில்லின் உபயோகங்கள்

ட்ரெட்மில் உபயோகிக்க எளிதானது. நாம் நம் உடலின் செயற்பாட்டிற்கு ஏற்ப நம் வீட்டில் இருந்தபடியே நடைபயிற்சி செய்யலாம். வசதியான ஆடையை உடுத்திக்கொண்டும், டி.வி. பார்த்துக்கொண்டும், செய்தி கேட்டுக்கொண்டும் நடக்கலாம். காலையில் நடக்கும் போது வரக்கூடிய இடர்பாடுகள் எதுவும் இதில் இல்லை.

ட்ரெட்மில்லில் நடப்பதால் நாம் எவ்வளவு தூரம் நடந்தோம்?, நம் உடல் செயல்பாடு எப்படி மாறுகிறது?, எவ்வளவு கலோரிகளை எரித்திருக்கிறோம்? என்பது போன்ற விஷயங்களை இதில் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய உடற்பயிற்சியின் தன்மை, தேவை போன்றவற்றிற்கு ஏற்ப நாம் ட்ரெட்மில்லில் தேர்தெடுத்து அதன் வழிகாட்டுதலின் பேரில் நடைபயிற்சியை செய்யலாம்.

வீட்டில் நாம் இருக்கவேண்டிய அவசியம் இருக்கும் போது, குழந்தைகளையோ, பணியாட்களையோ கண்காணித்துக் கொண்டே கூட நாம் ட்ரெட்மில்லில் நடைபயிற்சி செய்யலாம்.
Tags:    

Similar News