லைஃப்ஸ்டைல்
இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம்

இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம்

Published On 2020-08-15 04:01 GMT   |   Update On 2020-08-15 04:01 GMT
இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம் என்கிறார்கள், உடற்பயிற்சி நிபுணர்கள். மேலும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன்பு ஜாக்கிங் செய்யும்போது உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும்.
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் பெரும் பாலானோர், ‘ஜாக்கிங்’ செய்வதற்குத்தான் விரும்புகிறார்கள். அதைத்தான் உடற்பயிற்சியின் சிறந்த வடிவமாகவும் கருதுகிறார்கள். மற்ற உடற்பயிற்சிகளை போல் உடலை வருத்த வேண்டியதில்லை. ஜிம்முக்கு சென்று கடினமான உடற்பயிற்சி சாதனங்களை கையாள வேண்டியதுமில்லை. எத்தகைய கடின பயிற்சிகளும் மேற்கொள்ளாமல் உடலில் உள்ள கலோரிகளை எளிமையாக எரிக்க உதவுகிறது, ஜாக்கிங்.

ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதற்கு நல்ல காலணிகள் இருந்தால் மட்டுமே போதுமானது. காலை நேரத்தைத்தான் பலரும் ஜாக்கிங் செய்வதற்கு தேர்ந்தெடுக்கிறார்கள். இரவு நேரத்தில் கூட ஜாக்கிங் செய்யலாம் என்கிறார்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்.

காலையில் அலாரத்துடன் போராடி கண் விழித்து, அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் குறுகிய நேரத்தை மட்டுமே ஜாக்கிங் செய்வதற்கு ஒதுக்குபவர்கள், இரவு நேரத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் இரவில் அதிக நேரம் ஓடி பயிற்சி பெறலாம். காலையில் எழுவதற்கு சோம்பல் கொள்பவர்கள் இரவு நேர ஓட்டப் பயிற்சியை பின்பற்ற தொடங்கலாம். இரவு நேரத்தில் ஓடுவது மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிட தூண்டும். மேலும் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்க செல்வதற்கு முன்பு ஜாக்கிங் செய்யும்போது உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும்.

கலோரிகளை எளிதாக எரிப்பதற்கும் உதவும். இரவை ஒப்பிடும்போது காலை வேளையில் வெறும் வயிற்றுடன் ஓடுவதற்கு சவாலாக இருக்கும். ஆனால் இரவு நேரத்தில் அந்த சிரமமில்லை. இரவில் ஓடும்போது தசைகளின் இறுக்கம் தளர்வடையும். இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவும். அதனால் நிதானத்துடனும், அதிக கவனத்துடனும் செயல்பட முடியும். தசைகள் இலகுவாகுவதால் இரவில் நன்றாக தூங்குவதற்கும் வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட வைக்கும். மனக்குழப்பத்தை விலக்கி அடுத்த நாள் சிறப்பாக திட்டமிடவும் வழிவகை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்வதில் சில பிரச்சினைகளும் இருக்கின்றன. இரவில் வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஓடும் பாதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிறு பள்ளங்கள், கற்கள் சிதறி கிடப்பது எளிதில் கண்களுக்கு தெரியாது. அதனால் கீழே விழுந்து சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இரவில் தனிமையில் ஓடாமல் துணைக்கு யாரையாவது அழைத்துக்கொள்ளலாம். அது தனிமையில் இருக்கும் எண்ணத்தை தவிர்க்க உதவும். இருவரும் சேர்ந்து ஓடுவது பாதை மீது கூடுதல் கவனம் செலுத்த வழிவகை செய்யும். இரவில் ஓடும்போது சாலை விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
Tags:    

Similar News