லைஃப்ஸ்டைல்
நடைப்பயிற்சி

நடைப்பயிற்சியை எதற்காக செய்ய வேண்டும்

Published On 2020-07-10 03:28 GMT   |   Update On 2020-07-10 03:28 GMT
ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி செய்வது இதய, ரத்த நாளங்களை மேம்படுத்த, எலும்பை வலுப்படுத்த, அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைப்பயிற்சி மிகச்சிறந்த வழி. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் நடைபயிற்சி செய்வது இதய, ரத்த நாளங்களை மேம்படுத்த, எலும்பை வலுப்படுத்த, அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

மற்ற உடற்பயிற்சிகளை செய்யும் போது, கருவிகளில் உடற்பயிற்சி உடல் தசைகளில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.   ஆனால், நடைப் பயிற்சியில் பாதிப்பு என்பது மிக மிகக் குறைவு தான். நடைப்பயிற்சி செய்வதன் பலன்களைத் தெரிந்துகொள்வோம்!

நடைப்பயிற்சி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதய தசைகள் மற்றும் நுரையீரலை உறுதிப்படுத்துகிறது. மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், தசைகளில் இருக்கம், வலி உள்ளிட்டவை வராமல் காக்கிறது.  தசைகள், எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நம்முடைய உடலின் பேலன்ஸ் உறுதி செய்யப்படுகிறது.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. கலோரி எரிக்கப் படுவதால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நடக்கும்போது நேராக நிமிர்ந்து பார்த்து நடக்க வேண்டும். கூன் போட்டு, வளைந்து நெளிந்து நடக்க வேண்டாம்.  அதே நேரத்தில் மிகவும் விரைப்பாக நடக்க வேண்டாம். கழுத்து, தோள்பட்டை, இடுப்பு தளர்வாக இருக்கட்டும்.

கைகளை சற்று மடக்கி வைத்து முன்னும் பின்னும் நடை பயிற்சிக்கு ஏற்ப அசைத்து நடக்க வேண்டும். அவசர அவசரமாக ஓட வேண்டாம். மென்மையாக, தரையில் நன்கு பாதங்கள் பதித்து நடக்க வேண்டும். எடுத்த எடுப்பில் உச்சக்கட்ட வேகத்தில் நடக்க வேண்டாம்.  முதல் 10 நிமிடங்கள் உடலை நடைப் பயிற்சிக்குப் பழக்கப்படுத்த மெதுவாக நடக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை உயர்த்த வேண்டும்.

அதன் பிறகு கடைசி 10 நிமிடங்கள் வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்த வேண்டும்.  நடைப் பயிற்சி முடிந்ததும் அப்படியே வந்து விட வேண்டாம். தசைகளுக்கு ஸ்டிரெச்சிங் பயிற்சி கொடுத்த பிறகே பயிற்சியை முடிக்க வேண்டும். சாலையில் நடப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம். பூங்காக்களில் நடப்பது நல்லது. சாலையில் நடக்கும் போது வாகனங்கள் வருவதற்கு எதிர் திசையில் நடப்பது நல்லது.

அதிகாலை நேரத்தில் நடப்பவர்கள், கையில் ஒளிரும் பட்டை அணிந்து கொண்டு நடப்பது நல்லது.
Tags:    

Similar News