லைஃப்ஸ்டைல்
‘ஆன்லைன்’ மூலம் உடற்பயிற்சிகளை கற்று தரும் பெண் பயிற்சியாளரையும் அதனை பெண் ஒருவர் கற்றுக்கொள்வதையும் காணலாம்.

ஆன்லைன் மூலம் நடக்கும் உடற்பயிற்சி யோகா, தியான வகுப்புகள்

Published On 2020-06-22 03:23 GMT   |   Update On 2020-06-22 03:23 GMT
ஊரடங்கு காலத்தில் ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சியை நிபுணர்கள் வழங்கி வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் நடக்கின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் பல்வேறு கடைகள் தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டன. சலூன் கடைகள், அழகு நிலையங்கள் போன்றவை திறந்து செயல்படும் நேரத்திலும் உடற்பயிற்சி கூடங்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடிய நிலையிலேயே இருக்கின்றன.

பொதுவாகவே எடைக்குறைப்பு, உடல்நல பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏராளமான உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்கள், இதய நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் அதிகமானோர் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்துகிறார்கள். தற்போது உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப் பட்டிருப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். வீட்டின் மொட்டை மாடிகளிலும் வளாகங்களிலும் எளிய உடற்பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சியும் செய்துகொள்கிறார்கள்.

உபகரணங்கள் இல்லாமலேயே...

தற்போது உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சிகளை தருவதற்காக பயிற்சி கூட உரிமையாளர்கள் மற்றும் நிபுணர்கள் களமிறங்கியுள்ளனர். பயிற்சிக் கூடங்களிலோ அல்லது வீடுகளிலோ இருந்து ஆன்லைன் மூலமாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிபுணர்கள் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.எந்தவித உபகரணங்களும் இல்லாமல் எளிய உடற்பயிற்சிகள் மூலமாகவே வாடிக்கையாளர்களின் உடல் நலத்தைப் பேண தொடங்கி இருக்கிறார்கள். நிபுணர்கள் செய்வதை ஆன்லைன் வழியாக பார்த்து அப்படியே வாடிக்கையாளர்கள் செய்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அதேவேளை யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கும் குறிப்பிட்ட கட்டணத்தை உடற்பயிற்சிக் கூடங்கள் வசூலிக்கின்றன. உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லாவிட்டாலும் பயிற்சியாளர்கள் அறிவுரைகள் நேரடியாக கிடைப்பது ஓரளவு பரவாயில்லை என்றே வாடிக்கையாளர்கள் கருதுகிறார்கள். இதனால் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி ஆன்லைன் வழியாகவே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

யோகா, தியான வகுப்புகள்

இதுகுறித்து சென்னை சாந்தோமை சேர்ந்த உடற்பயிற்சி நிபுணர் பி.எஸ்தர் கூறியதாவது:-

தற்போது ஜிம்கள் மூடப்பட்டிருப்பதால், உடற்பயிற்சி செய்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாகவும், பயிற்சி முறைகளில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ஆன்லைன் வழியாக உடற் பயிற்சி வழங்க தீர்மானித்து அதன்படி பயிற்சி அளித்து வருகிறோம். இதற்காக 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்கிறோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அதன்படி தொப்பை குறைப்பு, உடல் எடை குறைப்பு, உடல் நல மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி அளித்து வருகிறோம். அதேபோல மன அழுத்தத்தைத் தவிர்க்கும் வகையிலான யோகா மற்றும் தியான வகுப்புகளும் ஆன்லைன் மூலமாகவே முன்னெடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் வேண்டுகோள்

சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த அனுஜா பெர்னாண்டோ கூறுகையில், “தற்போது எங்களுக்கு ஜிம் பயிற்சியாளர்கள் ஆன்லைன் வழியாகவே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் இது ஒரு தற்காலிக நடவடிக்கை தான். விரைவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டால் எங்களுக்கு மகிழ்ச்சியாக அது அமையும். உடல் எடையை குறைக்க பெண்கள் மிகவும் மெனக்கெடுகிறார்கள். தற்போது இந்த 3 மாத காலத்தில் பெண்கள் மீண்டும் எடை கூடியிருப்பார்கள். எனவே விரைவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட வேண்டும்”, என்றார். 
Tags:    

Similar News