லைஃப்ஸ்டைல்
படிக்கட்டில் நடைப்பயிற்சி

உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி உதவுமா?

Published On 2020-05-23 03:19 GMT   |   Update On 2020-05-23 03:19 GMT
அடுக்கு மாடி வீடுகளில் லிப்ட் இருந்தாலும் மாடிப்படி இல்லாது இருப்பதில்லை. தினமும் 10 நிமிடங்கள் மாடி ஏறி இறங்கும் பயிற்சியினை செய்தால் கெட்ட கொழுப்பு நீங்கும்.
பொதுவில் பலர் உடற்பயிற்சியில் ஓட்டப் பயிற்சியினை ஒரு பகுதியாக செய்வர். எளிதாகவும் செய்வர். ஆனால் திடீரென சில நிமிடங்கள் ஓட்டப் பயிற்சியோ அல்லது வேறு பயிற்சியோ செய்யும் பொழுது அதிக சோர்வு ஏற்பட்டால், தனது உடல் நலனில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

இருதயத்தினைப் பற்றி பேசும் பொழுதும் சரி, சர்க்கரை பாதிப்பினை பற்றி பேசும்பொழுதும் சரி ஒருவரின் எடை மிக அதிகமாக இருப்பின் மருத்துவர்கள் கூறும் முதல் அறிவுரை எடையைக் குறையுங்கள் என்பதுதான். சற்றே கூடுதலான எடை என்றாலும் எடை குறைப்பு என்பது மிக முக்கியமானதாகி விடுகின்றது. எல்லாவற்றிலும் மிக கடினமான செயல் எடை குறைப்புதான் என்பதனை முயற்சி செய்பவர்கள் கூறுவார்கள்.

தினமும் 30 நிமிட நடைபயிற்சியால் எடை குறையாது. தினமும் 45 நிமிட நடை பயிற்சி, அதுவும் சற்று விறுவிறுப்பான நடை பயிற்சி எடை குறைய உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் வீட்டில் இருக்கும் பொழுதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடம் நடக்க வேண்டும்  என உடல் நல குறிப்பாக அறிவுறுத்துகின்றனர்.

உடற்பயிற்சி என்பது மட்டுமல்லாது வீட்டு வேலைகளையும் செய்து சுறுசுறுப்பாக இருப்பது இருதயத்தினை காப்பாற்றும்.

அநேகர் சாப்பிடும்பொழுது டி.வி.முன் அமர்ந்துதான் தட்டினை மடியில் வைத்து உணவு உண்பர். எடை குறைய வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் வீட்டில் பெரிய ஆள் உருவ கண்ணாடி இருந்தால் அதன் முன் அமர்ந்து உணவு  உண்ண வேண்டும் என்று கூறப்படுகிறது. இப்படி உண்பவர்கள் தான் பொதுவில் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்குதான் எடுத்துக் கொள்வார்களாம். இது உணவினை குறைப்பதற்கு எளிதான வழியாக சொல்லப்படுகின்றது.

மாடிப்படி என்பது இன்று எல்லா வீடுகளுக்கும் இருக்கின்றது. அடுக்கு மாடி வீடுகளில் லிப்ட் இருந்தாலும் மாடிப்படி இல்லாது இருப்பதில்லை. தினமும் 10 நிமிடங்கள் மாடி ஏறி இறங்கும் பயிற்சியினை செய்தால் கெட்ட கொழுப்பு நீங்கும். இருதய ஆரோக்கியம் கூடுகின்றது. எடை குறைய விரும்புகிறவர்கள் பசி நன்றாக எடுக்கும் பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடும் அறை பக்கம் 12 மணி நேரம் எட்டிப் பார்க்காமல் இருப்போம். மாலை 6 மணிக்குள் உணவினை முடித்துக் காலை ஆறு மணிவரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். தண்ணீர் குடிக்கலாம்.

இரவு உணவு முடித்த பிறகு சுமார் 20 நிமிடங்கள் நடப்பது எடை குறைப்பிற்கு பெரிதும் உதவும். இது போன்று மதிய உணவிற்குப் பிறகும் விட்டிற்குள்ளேயே நடக்கலாம். ஆனால் மிக அதிகமாக உணவு உண்டு விட்டு இதனைச் செய்வது சிரமமாக இருக்கும்.

ஒரு நாள் எத்தனை அடிகள்  நடக்கின்றோம் என்பதனை கணிக்கும் கருவிகள் உள்ளன. கை கடிகாரம் போல் இதனை அணிந்து கொண்டால் அன்றாடம் நம் நடையின் அடிகளை கணக்கிட்டு சொல்லும். குறைந்தது ஒருவர் 10 ஆயிரம் அடிகளாவது நடக்க வேண்டும் என்பதே இதனை அணிவதன் நோக்கம், நடை பயிற்சி என்பது குறிப்பிட்ட நேரம் மட்டும் நடப்பது அல்ல. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டு இருப்பது ஆகும். இப்படி இருப்பது உங்கள் இருதயத்தினைக் காக்கும் மிக எளிய வழி. 90 சதவீதம் வீட்டில் சமைத்த உணவினை உண்பது ஆரோக்கியமானவராக உங்களை வைக்கும். 
Tags:    

Similar News