லைஃப்ஸ்டைல்
யோகாசனம்

யோகாசனம் செய்யும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க

Published On 2020-04-02 04:22 GMT   |   Update On 2020-04-02 04:22 GMT
பொதுவாக யோகாசனம் செய்பவர்கள் மிக முக்கியமாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
6 வயதிலிருந்து எல்லோரும் யோகா செய்ய ஆரம்பிக்கலாம். காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். மாலையில் உடல் நன்றாக வளைந்து கொடுக்கும்.

பயிற்சி செய்யும் இடம் நல்ல தூய்மையான காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டியது முக்கியம். உடலை உறுத்தும் வெறும்தரை பயிற்சிக்கு ஏற்றதல்ல. எனவே ஜமுக்காளத்தை நான்காக மடித்து விரித்து அதன் மேல் உட்கார்ந்து பயிற்சி செய்யவும்.

இறுக்கமான ஆடைகள் பயிற்சிக்கு ஏற்றதல்ல. பயிற்சியின்போது உடல் தடையில்லாமல் இயங்குவதற்கு ஏற்றவாறு குறைந்த அளவு ஆடைகளே போதுமானது.

பயிற்சியின்போது வயிறு காலியாக இருக்கவேண்டும். காலையில் உணவருந்துவதற்கு முன்பும், மாலையில் உணவருந்தி 3 மணிநேரம் கழித்த பின்பும் பயிற்சியில் ஈடுபடலாம். பயிற்சியில் ஈடுபடும் முன் மலசலம் கழித்து சிறிது வெந்நீர் அருந்திவிட்டு பயிற்சியில் ஈடுபடலாம். தேவையெனில் குளிரூட்டப்படாத பழரசம் சிறிது அருந்தலாம்.

 எடுத்த எடுப்பிலேயே கடினமான யோகாசனப் பயிற்சிகளை செய்ய முயற்சிக்க வேண்டாம். செய்வதற்கு எளிதான யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்து உடலை பழக்கப்படுத்தவும்.

பொதுவாக யோகாசனம் செய்பவர்கள் மிக முக்கியமான ஒரு விஷயத்தை இங்கு கவனிக்க வேண்டியது மிக முக்கியம். அரைமணி நேரம் அல்லது 1 மணி நேரம் பயிற்சில் ஈடுபடுகிறீர்கள் என்றால் குறைந்தது 4 முதல் 6 வகையான ஆசனங்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்வீர்கள் அல்லவா அப்படி பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளும் ஆசனம் முதல் ஆசனம் உடலை முன்னோக்கி வளைக்கும் படியான ஆசனமாக இருந்தால் அடுத்து செய்யும் இரண்டாவது ஆசனம் உடலை பின்னோக்கி வளைக்கும் ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்ய வேண்டும்.

இதனையே மாற்று ஆசனம் என அழைப்பர். அப்படி பயிற்சி செய்யாமல் அனைத்து ஆசனங்களையும் ஒரே பொசிஷனில் இருக்கும்படியான ஆசனத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தீர்கள் என்றால் அஜீரணக்கோளாறு. மலச்சிக்கல், தசைப்பிடிப்பு, முதுகு கூன்விழுதல் போன்ற உடல்பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். எனவே ஆசனங்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள்.

தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை பயிற்சி மேற்கொள்ளலாம்.
Tags:    

Similar News