லைஃப்ஸ்டைல்
பிரணாயாமம்

நோய் கிருமிகள் தாக்காமல் காக்கும் பிரணாயாமம்...

Published On 2020-03-27 03:09 GMT   |   Update On 2020-03-27 03:09 GMT
கொரோனா போன்ற வியாதியில் இருந்து நம்மை இயற்கையாக தற்காத்துக் கொள்ள “பிரணாயாமம்” மிகச்சிறந்த வழிமுறையாகும்.
இன்று உலகத்தில் உள்ள அனைவரும் மிரண்டுபோய் இருக்கிற ஒரு பெயர் கொரோனா. தாங்கள்தான் மிகப்பெரிய வல்லரசு நாடு என்று சொல்லிக் கொள்ளும் வளர்ந்த நாடுகள் கூட, என்ன செய்வது? இதை எப்படி தடுப்பது? அல்லது எப்படி கட்டுப்படுத்துவது? என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஏறத்தாழ இந்த வைரஸ் ஏற்படுத்திய நோயின் தாக்கம், சீனா உள்பட 177 நாடுகளில் பரவி இருக்கிறது. வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, நம் தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் ஒரு சிலர் கூட இதனால் பாதிக்கப்பட்டு அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசும் குறிப்பாக சுகாதாரத்துறையும், இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பரவலில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு, வெகு சிறப்பாகவும், துரிதமாகவும் செயல்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

இது போன்ற வியாதியில் இருந்து நம்மை இயற்கையாக தற்காத்துக் கொள்ள “பிரணாயாமம்” மிகச்சிறந்த வழிமுறையாகும். எப்படி என்றால் உடம்பில் சக்தி பற்றாக்குறை என்ற நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போதுதான், எல்லா வித வியாதிகளை ஏற்படுத்தும் விஷக்கிருமிகள் உடம்பிற்குள் சென்று பல விதமான நோய்களை உண்டாக்குகிறது. அதுவும் இந்த வைரஸ் பரவும் வேகம் அனைவருக்கும் ஒரு வித பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது மற்றும் பாதித்தவர்கள் நல்ல விதமாக இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற நோக்கம்தான் அரசு மற்றும் நம் அனைவரின் எண்ணமும், விருப்பமும் ஆகும்.

நம் ஒவ்வொருவருடைய கடமை அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதுதான். அரசாங்கம் சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றியும், அதே நேரம் நோய்கள் வராமல் நம்மை நாமே இயற்கை முறையில் காத்துக்கொள்வதும் நம்முடைய கடமை மற்றும் பொறுப்பாகும்.

இந்த கொடிய நோயின் தாக்கம் முதலில் சுவாச குழாய் மற்றும் நுரையீரலைத்தான் பாதிக்கும். அதன் காரணமாக இயல்பாக மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாக்கும். அதே நேரம் இந்நோயில் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினாலோ அல்லது இருமினாலோ இந்த கொடிய விஷக்கிருமிகள் மூக்கு மற்றும் வாய் வழியாக காற்றில் பரவி அருகில் இருப்பவர்களை உடனே பாதிப்புக்கு உள்ளாக்கும். அதனால்தான் இந்த நோயில் பாதித்தவர்களை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருக்குமாறும், மற்றவர்களை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சொல்கிறார்கள். இப்படி வீட்டில் இருக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக்கவும், இயற்கை முறையில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் யோக பிரணாயாமத்தை தினமும் செய்ய வேண்டும்.

“பிரணாயாமம்’ தொடர்ந்து செய்யும்போது அதிகமான பிராணசக்தி நுரையீரலுக்குள் செல்கிறது. அதன் காரணமாக உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. நல்ல காற்றோட்டமான இடத்தில் உணவு உண்பதற்கு முன் (வெறும் வயிற்றில்) யோகாசனமோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பயிற்சியோ செய்துவிட்டு இந்த பயிற்சியை செய்யலாம்.

பிரணாயாமத்தில் ஏறக்குறைய பத்து வகைகள் இருந்தாலும் இங்கு நமக்கு தேவை, “சுக பூர்வ பிரணாயாமம்” மட்டும்தான். இந்த பிரணாயாமத்தை தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் சரியான முறையில் தொடர்ந்து செய்யும்போது, இயற்கையாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். சுக பூர்வ பிரணாயாமம் எல்லோராலும் சுலபமாக செய்யக்கூடிய மிக அற்புதமான பிரணாயாமம் ஆகும்.

செய்முறை:- தரையில் ஒரு விரிப்பின் மீது வஜ்ராசனத்திலோ அல்லது எப்படி உட்கார்ந்தால் சவுகரியமாக இருக்குமோ அவ்வாறு அமர்ந்து கொள்ளலாம். மூட்டு வலி இருப்பவர்கள் நாற்காலியில் உட்காரலாம். எப்படி உட்கார்ந்தாலும் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சில வினாடிகள் அமைதியாக இருந்த பின்பு, வலது கை பெருவிரலால் வலப்பக்க மூக்கு துவாரத்தை மூடி, இடப்பக்க மூக்கு துவாரத்தின் வழியே மெதுவாக மூச்சு காற்றை வெளிவிட வேண்டும்.

உடனே இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியே மெதுவாக ஒரு லயத்தோடு மூச்சு காற்றை உள்ளிழுத்தவுடன், வலது கை மோதிர விரலால் (நான்காவது விரல்) இடப்பக்க மூக்கு துவாரத்தை மூடி, வலது பக்க மூக்கின் வழியே மூச்சுக் காற்றை மெதுவாக வெளிவிட வேண்டும். பின்பு வலது பக்க மூக்கின் வழியே மூச்சுக்காற்றை மெதுவாக உள்ளிழுத்து, வலப்பக்க மூக்கை பெரு விரலால் மூடி, இடது பக்க மூக்கு துவாரத்தின் வழியே மூச்சுக் காற்றை மெதுவாக வெளிவிட வேண்டும். இது ஒரு சுற்று. தொடக்கத்தில் ஐந்து சுற்று பயிற்சி செய்யலாம். இதை செய்யும் பொழுதே உடம்பு முழுவதும் சக்தி பரவுவதை உணர முடியும். இவ்வாறு சரியான முறையில் பிரணாயாமம் செய்யும்போது நுரையீரல் நன்கு விரிவடைந்து அதிகமான பிராண சக்தியான ஜீவ சக்தி உடல் முழுவதும் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் உயிர் சக்தி உடம்பு முழுவதும் முழுமையாக பரவுகிறது. இந்த பிரணாயாமத்தை செய்யும் போது இடது கை சின் முத்திரையில் இருக்க வேண்டும். (சின் முத்திரை என்றால் கட்டை விரல் நுனியால் பெரு விரல் நுனியை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்). மற்ற மூன்று விரல்கள் நேராக நீட்டிக் கொண்டிருக்க வேண்டும். கண்கள் மூடி இருக்க வேண்டும்.

இந்த பிரணாயாமத்தை நன்றாக பழகிய பின்னர், பத்து எண்ணிக்கை வரை செய்யலாம். இதை தினமும் காலை, மாலை தொடர்ந்து செய்துவர உடம்பில் உள்ளிருக்கும் அனைத்து உள்ளுறுப்புக்களும் நாடி நரம்புகள் முழுவதும் பலப்படுத்தப்பட்டு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி பெற்று எப்பொழுதும் ஆரோக்கியமான முறையில் இயங்கும். அதுவுமில்லாமல் எப்பொழுதும் கவனத்தோடும் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் ஆரோக்கியமாக இருக்கலாம்.இந்தப் பயிற்சியை தொடர்ந்து, வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து 15 நிமிடம் செய்யலாம். நோயுற்றவர்கள் சீக்கிரம் குணமடையவும், நம்நாடு இந்த பிரச்சினையில் இருந்து வெளிவந்து முன்னேற்ற பாதையில் செல்வதற்கும் கூட்டு தியானம் செய்யலாம்.

டாக்டர் த.இங்கர்சால்,

யோகாசன நிபுணர், சென்னை.
Tags:    

Similar News