லைஃப்ஸ்டைல்
நின்ற பாத ஆசனம்

ஆரோக்கியம் நிலைக்க ‘நின்ற பாத ஆசனம்’

Published On 2020-03-21 03:51 GMT   |   Update On 2020-03-21 03:51 GMT
முதலில் நம் உடல், மனதில் ஆரோக்கியம் நிலைத்து நிற்கும் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்க உதவும் நின்ற பாத ஆசனத்தை தினமும் பயிற்சி செய்ய வாருங்கள்.
வாழ்வில் பொதுவாக மனிதர்கள் பெரும்பாலும் ஆசைப்படுவது என் செல்வம் நிலைத்து நிற்க வேண்டும்,என் பெயர் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.அதற்கு முதலில் நம் உடல், மனதில் ஆரோக்கியம் நிலைத்து நிற்கும் வித்தையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் செல்வம், பெயர், புகழ் எல்லாம் நிலைத்து நிற்க பாடுபட வேண்டும். இதோ ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்க உதவும் நின்ற பாத ஆசனத்தை தினமும் பயிற்சி செய்ய வாருங்கள்.

செய்முறை

விரிப்பில் நேராக நிற்கவும். வலது காலை மடித்து பாதம் இடுப்புப் பகுதியில் வானத்தை நோக்கி இருக்குமாறு படத்திலுள்ளது போல் வைக்கவும். இப்பொழுது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிடவும்.

இந்நிலையில் சாதாரண மூச்சில் இருபது விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கை, கால்களை தரையில் கொண்டு வரவும். இதேபோல் காலை மாற்றி ஒரு முறை பயிற்சி செய்யவும். காலை, மாலை இரண்டு முறை பயிற்சி செய்யவும்.

குறிப்பு: முதலில் பயிற்சி செய்பவர்கள் நிதானமாக சுவரில் சாய்ந்து பயிற்சி செய்யவும். நன்கு முழுமையாக பயின்றவுடன் சுவரில் சாயாமல் பயிலலாம்.
அதிகமான உடல் எடை உள்ளவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், யோகாசன ஆசிரியரை அணுகி அவரின் நேரடி பார்வையில் பயிலவும்.

முதலில் பயிற்சி செய்பவர்கள் பத்து விநாடிகள் இருக்கவும். ஒரு மாதம் கழித்து இருபது விநாடிகள் இருக்கலாம். காலையில் சூரியனை நோக்கி கிழக்கு திசையிலும், மாலையில் சூரியனை நோக்கி மேற்கு திசையிலும் செய்வது நல்ல பலனைத் தரும். சூரிய ஒளிக்கதிர்கள் உடலில் படும்படி நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் பயில்வது மிக நல்லது.

நின்ற பாத ஆசனத்தின் பலன்கள்

குதிகால் பாத வலி: நிறைய மனிதர்களுக்கு குதிகால் எரிச்சல், பாத வலியில் அவதிப்படுகின்றனர். அவர்கள் இவ்வாசனம் செய்தால் மிக நல்ல பலன் தரும்.
மன அமைதி: நிறைய மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்வதில்லை. மன அமைதியின்றி குழப்பத்தில் தான் வாழ்கின்றனர். இந்த ஆசனம், மனக் குழப்பத்தை நீக்குகின்றது. மன அமைதியை அளிக்கின்றது.

மன ஒரு நிலைப்பாடு: நின்ற பாத ஆசனம் தொடர்ந்து செய்தால் மனம் தெளிவடையும். நிறைய மனிதர்கள் வாழ்வில் சின்ன பிரச்சனைகளுக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்தால் உள்ளம் தெளிவாகும்.

தோள் பட்டை வலி: பொதுவாக நாம் வலது பக்கம் அல்லது இடது பக்கம் அதிகமான வலுவை கொடுப்பதால் தோள்பட்டை சரியாக சமமாக இருக்காது. இலேசாக வவப்பக்கம், அல்லது இடப்பக்கம் விலகியிருக்கும். அதனால் தோள்பட்டை வலி வரும். இந்த ஆசனம் இதனை சரி செய்து அழகான தோற்றத்தையும் கொடுக்கின்றது.

மூட்டுவலி: உடலில் மூட்டுக்களில் தங்கியுள்ள கழிவுகள் நீங்கி, மூட்டு வலி வராமலிருக்கும்.

நரம்புத் தளர்ச்சி: உடல் கைகால் நடுக்கம், பதட்டத்தையும், நரம்புத் தளர்ச்சியையும் நீக்கி உற்சாகத்தை கொடுக்கிறது.

தூக்கம்: மனஅமைதி கிடைப்பதால் தேவையற்ற எண்ண ஓட்டம் அழிவதால் தூக்கம் நன்கு வரும். கோனாடு சுரப்பியின் குறைபாடுகளை நீக்குகின்றது. சிறு நீரகக் குறைபாடு அதனால் நீங்கும்.

அடிவயிறு பருமன்: சிலருக்கு அடி வயிறு மட்டும் அதிக பருமனாக இருக்கும். இந்த ஆசனம் அந்தக் குறைபாட்டை நீக்குகின்றது. கால் பாதத்திற்கு பிரபஞ்சசக்தி: இந்த ஆசனம் செய்யும் பொழுது பிரபஞ்சத்திலுள்ள நல்ல பிராணசக்தி கால் பாதத்தில் இறங்குகின்றது. கை வழியாகவும், பிராண ஆற்றலை உள் வாங்குகின்றோம். இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெற்று இயங்குகின்றது.

மாணவர்கள்: படிக்கின்ற மாணவர்கள் இந்த ஆசனத்தை தினமும் பயிற்சி செய்தால் நல்ல மன ஒருமைப்பாடு, மன அமைதி, சிந்தனை கிடைக்கும். எதையும் சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவர்.

உணவு: இந்த ஆசனத்துடன் முட்டைகோஸ், அவரைக்காய் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாறு தேனில் கலந்து இஞ்சி துண்டும் சேர்த்து வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள். புலால் உணவை தவிருங்கள். பசு நெய், வெண்ணை சிறிது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்தில் நிலைத்து நிற்கலாம்.
Tags:    

Similar News