பெண்கள் உலகம்
புஜங்காசனம்

கழுத்து, முதுகுவலியை குணமாக்கும் ஆசனம்

Published On 2020-03-14 08:39 IST   |   Update On 2020-03-14 08:39:00 IST
புஜங்காசனத்தை தினமும் செய்து வந்தால் கழுத்து, முதுகுவலி, அடி முதுகு, நடு முதுகுவலிகள் நீங்கும். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப் படுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இரு கைகளையும் இதயத்தின் பக்கத்தில் வைக்கவும். கை விரல்கள் தரையில் இருக்கவேண்டும். இப்பொழுது மெதுவாக மூச்சை உள் இழுத்து தலையை உயர்த்தி முதுகை பின்பக்கமாக வளைத்து கண்களை வானத்தை நோக்கி பார்க்கவேண்டும். (படத்தை பார்க்கவும்). இந்த நிலையிலில் மூச்சடக்கி 10 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு சாதாரண நிலைக்கு வரவும். சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை செய்யவும். இதேபோல் காலை மாலை செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு


அவசரப்படாமல், நிதானமாக, பொறுமையாக செய்ய வேண்டும். எடுத்தவுடன் முழுமை நிலை வராது. முதலில் உடலை வளைக்கும் பொழுது மெதுவாக வளைக்கவும். வலி ஏற்பட்டால் நிறுத்திக் கொள்ளவும். ஒரு மாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் முழுமைநிலை வரும். முதுகுத்தண்டில் அதிகவலி உள்ளவர்கள், முதுகெலும்பு விலகியிருந்தால் யோக வல்லுநரின் நேரடிப் பார்வையில் செய்யவும். சாதாரண வலி, அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்வதால் வலி, இருசக்கரம் அதிகம் ஓட்டுவதால் வலி உள்ளவர்கள் தாராளமாக இதனை செய்யலாம். பத்தே நாளில் பறந்துவிடும் முதுகுவலி. இது உண்மை.
இந்த ஒரு ஆசனம் கழுத்து முதுகு, நடு முதுகு, அடி முதுகு எலும்புகளில் உள்ள குறையை நீக்குகிறது. முதுகெலும்பை வலிமையாக்குகின்றது.

இந்த புஜங்காசனம் முதுகுவலியை மட்டும் போக்குவதில்லை இதோ இதன் மற்ற பலன்கள்:.


* ஆஸ்துமா, நுரையீரல் பலவீனம், இரத்தத்தில் சளி ஆகியவற்றை (ஈஸ்னோபைல்) நீக்குகிறது.
* கிட்னியை பலப்படுத்தி நன்றாக இயங்கச் செய்கின்றது.
* பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை எளிதில் போக்கும். வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளிப் போதல், அல்லது முன்பே வருதல், மாதவிடாய் சமயம் வயிற்றுவலி போன்றவைகள் நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

அந்த காலத்திலேயே உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழின் ஆய்வுத் தகவலின்படி முதுகுவலியை 96 யோகச்சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்று அறிவித்துள்ளனர்.  எனவே இந்த புஜங்காசனத்தை ஆண் பெண் இருபாலரும் பயிற்சி செய்து திடமான முதுகெலும்பைப் பெற்று வளமாக வாழுங்கள்.

Similar News