லைஃப்ஸ்டைல்
நடைப்பயிற்சி

இதயத் தசைகளை வலுவாக்கும் நடைப்பயிற்சி

Published On 2020-03-09 03:55 GMT   |   Update On 2020-03-09 03:55 GMT
நடைப்பயிற்சி இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர்.
நடைப்பயிற்சியில் Trekking, Leisure Walking, Race Walking, Power Malking என பலவகைகள் உள்ளன. இவற்றில் உங்களுக்கு எந்த வகைப் பயிற்சி ஒத்துவருகிறதோ அதைத் தொடர்ச்சியாகச் செய்து வர வேண்டும்.

மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும். இப்பயிற்சியை மேற்கொள்ள ஒரு ஜோடி காலணிகள் இருந்தால் போதும்.

எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் பல. அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100க்கு மேல் இருக்க வேண்டும்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே.

நடைப்பயிற்சியின் அவசியத்தை இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லியும் சிலர், நடப்பதற்கு எனக்கு நேரமும், வாய்ப்பும் கிடைக்கவே இல்லை என புலம்புவார்கள். அவர்களுக்கு சில அறிவுரைகள்…

நீங்கள் டி.வி.பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்றால் டி.வி. சேனல்களை மாற்ற ரிமோட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுந்து சென்று நேரிடையாக மாற்றலாம்.

காய்கறி மார்க்கெட்டுக்கும், பலசரக்குக் கடைக்கும் செல்ல இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து சென்று பொருட்களை வாங்கலாம்.

உங்கள் அலுவலகம், மூன்றாவது அல்லது நான்காவது மாடியில் இருந்தால் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாடிப்படிகளில் ஏறிச் செல்லலாம்.

நீங்கள் அலுவலகத்துக்கு பஸ்ஸில் செல்பவராக இருந்தால் அலுவலகத்தில் இருந்து பஸ்ஸில் வீட்டுக்குத் திரும்பி வரும்போது இரண்டு ஸ்டாப்புக்கு முன்னால் இறங்கி நடந்து வாருங்கள்.

நீங்கள் அடிக்கடி கோயிலுக்குச் செல்லும் பழக்கம் உடையவர் என்றால் கோயிலில் பிரகாரங்களை நன்கு சுற்றி வாருங்கள்.
Tags:    

Similar News