லைஃப்ஸ்டைல்
நடராஜ ஆசனம்

உச்சி முதல் பாதம் வரை நலமளிக்கும் நடராஜ ஆசனம்

Published On 2020-02-15 03:07 GMT   |   Update On 2020-02-15 03:07 GMT
நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கும் நிறைய ஆசனங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கும் தலை முதல் கால் வரை உள்ள உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்ய ஏற்ற ஆசனம் நலம் தரும் நடராஜ ஆசனம்.
கால் பாதத்தில் ஆரம்பித்து தலைவரை பிரச்சனைகள் உள்ள மனிதர்கள் இன்று ஏராளம். காரணம் வாழும் கலை எப்படி என்பது தெரியவில்லை.
ஒவ்வொரு எண்ணமும் நமது உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. மன அமைதியிருந்தால் தான் உடல் அமைதி பெறும். இதையே மாற்றி யோசித்தால் முதலில் உடல் அமைதி. பிறகு மன அமைதி கிடைக்கும். உடலில் தலை முதல் கால் வரையில் உள்ள உறுப்புகள் நன்றாக இயங்கினால் தான் நம் மனமும் அமைதியாயிருக்கும்.

உடல் அமைதிக்கு யோகாசனங்களை நம் சித்தர்கள் அளித்துள்ளார்கள். உள் அமைதிக்கு தியானத்தை யோகத் தந்தை பதஞ்சலி மகரிஷி அருளியுள்ளார்.
நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கும் நிறைய ஆசனங்கள் செய்ய முடியாது என்று நினைப்பவர்களுக்கும் தலை முதல் கால் வரை உள்ள உடல் உறுப்புகளை நன்றாக இயங்கச் செய்ய ஏற்ற ஆசனம் நலம் தரும் நடராஜ ஆசனம். இந்த ஒரு ஆசனத்தை காலை எழுந்தவுடன் பல் விளக்கிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று மூன்று முறைசெய்யுங்கள்.

நடராஜ ஆசனம் செய்முறை:

விரிப்பில் நேராக நிற்கவும்.
இரு கால்களையும் நன்றாக அகற்றவும்.
வலது கால் பாதத்தையும் இடது கால் பாதத்தையும் வலப்பக்கம் இடப்பக்கம் பார்க்கும்படி படத்திலுள்ளது போல் வைக்கவும்.
கால்களை தொடையை நேராக பக்கவாட்டில் படத்திலுள்ளது போல் வைக்கவும்.
இரு கைகளையும் பக்கவாட்டில் மடக்கி கை விரல்கள் வானத்தைப் பார்ப்பது போல் வைக்கவும்.
சாதாரண மூச்சில் 20 விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கால்களை கைககளை நன்றாக சேர்க்கவும். இதேபோல் மூன்று முறைகள் செய்யவும்

பலன்கள்

* தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சீராக இயங்குகின்றது.
* தலை வலி வராது.
* தோள்பட்டை வலி நீங்கும்.
* கைகள் வலுப்பெறும்.
* அஜீரணம், பசியின்மை நீங்கும்.
* மூலம் நீங்கும்.
* மலச்சிக்கல் நீங்கும்.
* தொடை தசைகள் வலுப்பெறும்.
* அழகான தோற்றம் உண்டாகும்.
* கால் பாதவலி நீங்கும்.
* நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
* மூட்டுக்கள் பலம் பெறும்.
* மூட்டு வலி மூட்டு தேய்மானம் வராது.
* நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
* கழிவுகள் வெளியேறும்.
* சுறுசுறுப்பாக திகழலாம்.
* முதுகு கூன் நிமிரும், முதுகெலும்பு வலுப்பெறும்.
* உடல் வசியம் ஏற்படும்.

இவ்வளவு நலன்கள் இந்த ஒரு ஆசனத்தில் இருப்பதால் தான் இதனை நலம் தரும் நடராஜ ஆசனம் என்று அழைக்கிறோம். நமது சித்தர்கள் இந்த ஆசனத்தின் மூலம் மனித உடலில் உள்ள 72000- நாடி நரம்புகளுக்கும் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும் என்கிறார்கள்.
Tags:    

Similar News