பெண்கள் உலகம்
அஞ்சலி முத்திரை

மன அமைதி தரும் அஞ்சலி முத்திரை

Published On 2020-02-14 08:22 IST   |   Update On 2020-02-14 08:22:00 IST
அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.
விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஒரு 5 நிமிடங்கள் அமைதியாக மூச்சை கவனிக்கவும்.

இப்பொழுது இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றையன்று தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். நமது இரண்டு பெருவிரல்களும் மார்புப் பகுதியில் தொடுமாறு வைக்கவும். இரண்டு கைகளும் இடைவெளியின்றி இணைந்திருக்க வேண்டும். நமது வலது கைவிரல்கள் இடது கை விரல்களைத் தொட்டுத் கொண்டிருக்கவும். தலையைச் சிறிது தாழ்த்தவும். கண்களை மூடியபடி இருக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் இருக்கலாம். இதுபோல் காலை மாலை மூன்று முறைகள் செய்யலாம்.

மனித உடலில் நேர்சக்தி எதிர்சக்தி இரண்டும் உள்ளது. நமது வலது கை நேர் சக்தி, இடது கை எதிர்சக்தி. நம் இரு கைகளும் அஞ்சலி முத்திரையில் இணையும் பொழுது சக்தி ஓட்டம் சிறப்பாக ஏற்பட்டு நிறைவு பெறுகின்றது. இதன் காரணமாக உடலில் பிராண சக்தி சரியாக, நிலையாக இருக்கும்.

மூளைக்கு எப்பொழுதும் ஓய்வு கொடுக்காமல் சிந்தனை செய்து கொண்டே இருந்தால் மூளை சூடேறும். அஞ்சலி முத்திரையில் மூளைக்கு ஓய்வு கிடைக்கின்றது. மூளை அமைதியாகின்றது. மீண்டும் சக்தி பெற்று சிறப்பாக இயங்கும்.

மன அழுத்தத்தினால் இன்று பல வகையான வியாதிகள் வருகின்றது. குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்களுக்கு முக்கிய காரணம் மன அழுத்தமே. இந்த அஞ்சலி முத்திரை மன அழுத்தத்தினால் வலது, இடது மூளையில் ஏற்பட்ட அதிர்வுகளை சரி செய்வதோடு மட்டுமல்ல, மன அமைதியையும் தரவல்லது.

யோகக் கலைமாமணி
P.கிருஷ்ணன் பாலாஜி
M.A.(Yoga)
6369940440

Similar News