லைஃப்ஸ்டைல்
ஹஸ்த தனூராசனம்

பலவித பலன்கள் தரும் ஹஸ்த தனூராசனம்

Published On 2019-12-19 03:26 GMT   |   Update On 2019-12-19 03:26 GMT
இந்த ஒரு ஆசனத்தை தினமும் செய்யுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
நாம் இன்றைய காலத்தில் கிடைக்கின்ற சைவ உணவு, பழம், காய்கறி சாதம் சாப்பிடலாம். அதிலுள்ள இரசாயனக் கழிவுகள் உடலில் தங்காமல் வெளியேற வேண்டும். குறிப்பாக கழிவுகள் வயிற்றில் குடல் பகுதியில் தங்கக் கூடாது. அதற்குத்தான் யோகக்கலை பயன்படுகின்றது. கழிவுகள் வயிற்றில் தங்கும் பொழுது பலவிதமான நோய்கள் ஏற்படும். நீரிழிவு, இரத்த அழுத்தம், பசியின்மை, அஜீரணம், அல்சர் ஏன் கேன்சர் வரை கழிவுகள் தங்குவதால் குறிப்பாக வயிற்றுப் பகுதியில் தங்குவதால் ஏற்படுகின்றது. இதற்கு யோகக்கலையில் எளிமையான ஆசனம் உள்ளது. அது தான் ஹஸ்த தனூராசனமாகும்.

செய்முறை

விரிப்பில் குப்புறப் படுக்கவும். மூச்சோட்டத்தை ஒரு நிமிடம் சரி படுத்தவும். வலது கால் கணுப்பகுதியில் வலது கையினால் பிடித்து காலை மேலே தூக்கவும். தலையையும் மேலே உயர்த்தவும்.

இடது கால், இடது கை படத்திலுள்ளது போல் தரையில் நேராக இருக்க வேண்டும். சாதாரண மூச்சில் பத்து விநாடிகள் இருக்கவும். பின் மெதுவாக கைகளை உயர்த்தி காலை தரையில் வைத்து ஒரு பத்து விநாடி ஓய்வெடுக்கவும். பின் காலை மாற்றி செய்யவும். மூன்று முறைகள் இவ்வாறு செய்யவும். பின் ஒரு நிமிடம் ஒய்வெடுக்கவும்.

ஹஸ்த தனூராசனத்தின் நன்மைகள்

இந்த ஆசனத்தில் காலை வளைத்து தலையும் மேலே தூக்கப்படுகின்றது. அதனால் கண், காது, முகத்திற்கு நல்ல இரத்த ஓட்டம் பாய்கின்றது. கண் நரம்புகள் சிறப்பாக இயங்கும். கண் பார்வை எவ்வளவு வயதானாலும் கெடாமல் சிறப்பாக இருக்கும். கிட்டப்பார்வை என்ற குறைபாடு வராது. காது எவ்வளவு வயதானலும் நன்றாக கேட்கும். காது சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

முகம் நன்றாக பொலிவாக இருக்கும். மிகப் பிரகாசமாக அனைவரையும் வசீகரம் செய்யும் படி அமையும். எந்த ஒரு மேக்கப் போடாமலேயே முகம் அழகாகயிருக்கும். இந்த ஆசனத்தை இரண்டு கால்களையும் மாற்றி செய்வதால் தோள்பட்டைவலி நீங்கும். தோள்பட்டை இலேசாக இறங்கியிருப்பது சரியாகும்.
தைராய்டு பாராதைராய்டு குறைபாடுகள் நீங்கி சிறப்பாக இயங்கும்.

மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்பகுதி, அதன் கீழ்பகுதி நன்கு அமுக்கப்படுவதால் மலச்சிக்கல் இல்லா வாழ்வு வாழலாம். மூட்டுக்கள் பலம் பெறும். மூட்டுவலி நீங்கும். நரம்புத் தளர்ச்சியை நீக்குகின்றது. இரத்த ஓட்டம் சீராக இயங்கும். பசியின்மை, அஜீரணக் கோளாறுகளை நீக்கி புத்துணர்வு கொடுக்கின்றது.

முதுகுவலி நீங்கும். முதுகு பலம் பெறும். இந்த ஆசனத்தில் எவ்வளவு பலன்கள் இருக்கின்றது பார்த்தீர்களா! இதைவிட இன்னும் நிறைய பலன்கள் உள்ளன. உடலுக்கு பிராண சக்தி கிடைக்கும். பசி நன்கு எடுக்கும். சுறுசுறுப்பாக இருக்கலாம். சோம்பல் நீங்கும். இன்று நாம் உண்ணும் உணவிலுள்ள நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுகள் வயிற்றின் தங்காமல் இருக்க இந்த ஆசனம் பயன்படுகிறது.

இத்துடன் மைதாவினாலான உணவுப் பொருட்களை தவிருங்கள். பசி எடுக்கும் பொழுது சைவ உணவு அதிலும் வாரம் மூன்று நாட்கள் சிறுதானிய உணவுகள் எடுத்தால் நல்ல ஆரோக்கியமாக வாழலாம். பொதுவாக ஒரு நாளில் முப்பது ஆசனங்கள் இரண்டு மணிநேரம் செய்தால் தான் ஆரோக்கியமாக வாழலாம் என்று நிறைய மனிதர்கள் நினைக்கின்றனர். உங்கள் எண்ணத்தை மாற்றுங்கள்.

நிதானமாக, அவசரப்படாமல் இந்த ஒரு ஆசனத்தை மூன்று தடவைகள் செய்யுங்கள். பத்து முதல் பதினைந்து நிமிடமாகும். இதிலேயே உடல் உள் உறுப்புகள் சிறப்பாக இயங்கும். நேரமில்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தை தினமும் செய்யுங்கள். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். நமது உடல் நலனுக்காக அதிகாலை அரைமணி நேரம் செலவழியுங்கள். ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.
Tags:    

Similar News