லைஃப்ஸ்டைல்

ஏரோபிக்ஸ் பயிற்சியின் பயன்கள்

Published On 2018-08-23 02:50 GMT   |   Update On 2018-08-23 02:50 GMT
ஏரோபிக்ஸ் உடலின் அனைத்துப் பாகங்களும் உள் உறுப்புகளும் புத்துணர்ச்சி பெற்று, உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பேருதவி புரிகிறது.
இனிமையான பின்னணி இசையோடும், பயிற்சியாளர் கட்டுப்பாடுடன் எண்ணும் எண்களின் வரிசைப்படியும் மேலும் கீழுமாக, இடம் வலமாக, வலம் இடமாக, சிறிது நடப்பது போல, சிறிது ஓடுவது போல, சிறிது குதிப்பது போல, சிறிது உட்கார்ந்து எழுந்திருப்பது போல, சிறிது படுத்து எழுந்திருப்பது போல, கைகள், கால்களை சிறிய அசைவுடன் தொடங்கி பின்பு வேகமாக அசைத்து, சுற்றுவதின் மூலம் வேர்வையின் மழையில் நனைந்து, ஒரு மாபெரும் நடனப்பயிற்சி முடிந்தது போல எண்ணி, இன்பமான களைப்போடு, தண்ணீர் அருந்திக்கொண்டு மெல்லிய துண்டால் வியர்வையை அகற்றிபெருமூச்சு விடும் சுகம் கிடைப்பது ஏரோபிக்ஸில்தான்! உடல் மற்றும் உள்ளச் சோர்வினை நீக்கி, எப்போதும் புத்துணர்ச்சியோடு, உற்சாகமாக இருக்க உதவுகிறது - ஏரோபிக்ஸ்!

ஏரோபிக்ஸின் பயன்கள்

* இதயத்தை வலுப்படுத்துகிறது.
* அளவுக்கு அதிகமான கொழுப்புச் சத்துகளை அகற்றுகிறது.
* உடலை மாசுபடுத்தும் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது.
* தேவைக்கு அதிகமான கலோரிகள்  எரிக்கப்படுகிறது.
* அதிகமான ஆக்சிஜனை  உடலில் செலுத்துகிறது.
* ரத்த ஓட்டம் சீராகவும் அதிகரிக்கவும் உதவுகிறது.
* முக்கியமாக வயிற்றுப் பகுதியில் உண்டாகும் பெரும் தொப்பையை குறைக்க உதவுகிறது
* உடல் தசைகளை இறுக்கி உறுதியாக்குகிறது.
* எடை குறைத்து, அதன் மூலமாக கால் மூட்டுகளில் உண்டாகும் அழுத்தம் குறைய உதவுகிறது.
* உடலில் உண்டாகும் முழுப்பருமன் (Obesity) குறைக்கப்பட்டு அடித்தள
முதுகுவலி  வராமல் பாதுகாக்கிறது.
* உடலின் அனைத்துப் பாகங்களும் உள் உறுப்புகளும் புத்துணர்ச்சி பெற்று, உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள பேருதவி புரிகிறது.

கவனம் தேவை... ’எல்லோரும் ஏரோபிக்ஸ் போகிறார்கள்... அதனால் நானும் போகிறேன்’ என ஏதாவது ஒரு பயிற்சிக்கூடம் சென்று உடலை கெடுத்துக் கொள்ளக் கூடாது. சரியாக செய்யாவிட்டால் உடலின் தசைகளில், எலும்பு இணைப்புகளில், அதிமுக்கியமாக முதுகெலும்பில் பயங்கர காயங்கள் (Chronic injuries) உண்டாக வாய்ப்புகள் அதிகம்.

எனவே, நன்றாக பயிற்சி பெற்ற, அனுபவம் வாய்ந்த ஏரோபிக்ஸ் பயிற்சியாளரிடம் தனிப் பயிற்சி பெற்று, ஒவ்வொரு நாளும் உங்களின் பயிற்சியின் முன்னேற்றம் (Progressive training record) கண்காணிக்கப்பட வேண்டும். ஏற்கனவே உடலில் ஏதாவது காயம், அடிபட்ட வலி உண்டெனில், அதை பயிற்சியாளர் உதவியோடு சரிசெய்த பின்னரே ஏரோபிக்ஸில் சேரவோ, தொடரவோ வேண்டும்.
Tags:    

Similar News