லைஃப்ஸ்டைல்

சுவாசக் கோளாறுக்கு பயனுள்ள அர்த்த சிரசாசனம்

Published On 2018-08-09 02:39 GMT   |   Update On 2018-08-09 02:39 GMT
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூச்சுத்திணறல் குறையும். நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது.
பெயர் விளக்கம் : அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது.

செய்முறை : வஜ்ராசனத்தில் உட்காரவும், கைவிரல்களை கோர்த்து குனிந்து முழங்கையிலிருந்து கைவிரல்கள் வரை தரை விரிப்பின் மேல் படிய வைக்க வேண்டும். தலையின் மேல் பகுதியை தரையில் வைக்கவும். உள்ளங்கைகள் தலையின் பின்புறத்தை தாங்கிக் கொள்ளும்படி இருக்கட்டும். முழங்கைகளை தரையிலிருந்து உயர்த்தி கால் விரல்களை முகத்தை நோக்கி சற்று நகர்த்தி வைக்கவும். முழங்கால்கள் மடங்காமல் இருக்கட்டும்.

இந்த ஆசன நிலையில் 1 முதல் 2 நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு கால்களை மடக்கி முழங்கால்களை தரைவிரிப்பின் மேலே வைத்து உடனே தலையை மேலே தூக்காமல் சில வினாடிகள் இருந்து பிறகு வஜ்ராசன நிலைக்கு வரவும். அதிலிருந்து கால்களை நீட்டி வைத்து ஓய்வு நிலைக்கு செல்லவும். (சுவாசனம்). இந்த ஆசனத்தை 1-3 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம் : மூச்சு, தலை, கழுத்து மற்றும் சகஸ்ர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

பயிற்சிக் குறிப்பு : புதியதாக அர்த்த சிரசாசனம் செய்யும் போது ஒரு நிமிடம் கூட செய்ய இயலாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யவும்.

தடைக்குறிப்பு : கண், காது, மூக்கு, தொண்டை இவைகளில் நோய் உண்டான போதும், இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, கடினமான மலச்சிக்கல், மிக அசுத்தமான ரத்தம், கழுத்துவலி, தலைவலி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களும், கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

பயன்கள் : மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால், சிரசாசனம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் ஓரளவு இந்த ஆசனத்திற்கும் உண்டு. குறைந்த ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது. மூச்சுத்திணறல் குறையும். நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது. 
Tags:    

Similar News