லைஃப்ஸ்டைல்

மனம் தெளிவு பெற தினமும் தேவை யோகா

Published On 2017-12-11 05:57 GMT   |   Update On 2017-12-11 05:57 GMT
தியானம் உடல் செல்களுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் மனதை தெளிவு பெற செய்யும்.
காலை எழுந்தவுடன் அவசரமாக கிளம்பி வேலைக்கு செல்பவர்கள் மனதில் அன்றைய நாளில் செய்ய வேண்டிய பணிகள் பற்றிய சிந்தனைகள் நிழலாடும். பெண்கள் என்றால் வீட்டு வேலையை முடித்துவிட்டு அலுவலகத்துக்கு புறப்படும்போது, வேலைப்பளு பற்றிய கவலை மலைப்பை ஏற்படுத்தும். திட்டமிட்டு செயல்பட்டால் மனதை அழுத்தும் கடினமான வேலை களைக்கூட திறமையாக சமாளித்துவிடலாம்.

முதலில் அவசரமான பணி, முக்கியமான பணி, முக்கியம் ஆனால் அவசரமில்லை என பணிகளை மூன்றுவிதமாக பிரித்துக்கொள்ளுங்கள். அவசரமான பணியை முதலில் செய்ய தொடங்குங்கள். அதனை முடித்துவிட்டாலே நெருக்கடிகள் குறைந்துவிடும். பின்னர் மற்ற பணிகளை பதற்றமின்றி செய்ய தொடங்கிவிடலாம்.

அலுவலக பணிகளை விரைவாக முடிப்பதற்கு இரண்டு விஷயங்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. ஒன்று தூக்கம், மற்றொன்று தியானம். இரவில் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இரவில் உடல் தூக்கம் கலந்த ஓய்வை மேற்கொள்ளும்போது உடலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெறும். உடலை வலுப்படுத்தும். மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்யும். 



அதுபோல் தியானம் உடல் செல்களுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் மனதை தெளிவு பெற செய்யும். அதனால் குறைந்தபட்சம் தினமும் 10 நிமிடமாவது தியானம் மேற்கொள்ள வேண்டும். பணிக்கு இடையே மனதுக்கு சில நிமிடங்களாவது ஓய்வு கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இடைவிடாமல் செய்யும் வேலையால் ஒருவித சலிப்பு ஏற்படக்கூடும். 

அவ்வப்போது சில நிமிடங்களாவது மனதை ஆசுவாசப்படுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டால், பரபரப்பு இல்லாமல் குறித்த நேரத்தில் வேலையை முடித்துவிடலாம். ஓய்வு நிமிடங்களில் தேநீர் பருகலாம். அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருக்கலாம். அல்லது கண்களை மூடி சில நிமிடங்கள் தியானமும் செய்யலாம். இம்முறையை சில நாட்கள் கடைப்பிடித்து பாருங்கள். முன்பை விட எளிதாக வேலைகளை முடித்து விடலாம்.

வார இறுதி நாட்களில் மலையேற்றம், நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். அது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். புத் துணர்ச்சி வேலையை விரைவாக முடிக்கும் சக்தியை தரும். 
Tags:    

Similar News