லைஃப்ஸ்டைல்

ஜும்பா நடனமாடினால் எடை குறைக்கலாம்

Published On 2017-09-21 04:09 GMT   |   Update On 2017-09-21 04:09 GMT
ட்ரெட் மில் மற்றும் க்ராஸ் ட்ரெயினரில் ஓடுவது பிடிக்காது வழக்கமானது என்று சொல்பவர்களுக்கு ஜும்பா நடன பயிற்சி ஒரு வரப் பிரசாதம்.
ஜும்பா (Zumba)... இன்றைய ஃபிட்னஸ் உலகின்  மந்திரச் சொல். துள்ளலான இசையுடன், உற்சாகம் ததும்பும் ஸ்டைலான நடன அசைவுகளை கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஜும்பா நடன பயிற்சி!

கொலம்பியன் டான்ஸர் மற்றும் நடன இயக்குநரான பெட்டோ பெரெஸ் (Alberto Beto Perez) என்பவரால் உருவாக்கப்பட்ட நடன உடற்பயிற்சி வகை இது. ஹிப்ஹாப் (Hiphop), சால்ஸா (Salsa), மேரெங்கே (Merengue) என்று பலவித மேற்கத்திய நடன அசைவுகளை கலந்து கட்டி, ஒரு சிறந்த ஆல்இன்ஒன் ஃபிட்னஸ் வகை நடனமாக உருவானது ஜும்பா.   

90களில் உருவான இந்த ஆட்டம், இன்று 125 நாடுகளுக்கும் மேல் சிறந்த ஃபிட்னஸ் பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமான போரடிக்கும் ஜிம் பயிற்சி நிமிடங்களை உற்சாகமானதாகவும் உயிர்ப்புள்ளதாகவும் ஆக்கியது ஜும்பாவின் இசை மற்றும் நடன முறை. ட்ரெட் மில் மற்றும் க்ராஸ் ட்ரெயினரில் ஓடுவது பிடிக்காது வழக்கமானது என்று சொல்பவர்களுக்கு ஜும்பா நடன பயிற்சி ஒரு வரப் பிரசாதம்.

உடலை நேர்த்தியாகவும் ஃபிட் ஆகவும் வைத்துக் கொள்வது ஒரு கலை. அதற்கும் ஜும்பா ரொம்பவே உதவும். எடைக் குறைப்பிலும் ரெகுலராக ஜும்பா பயிற்சி செய்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்கின்றனர். ஏரோபிக்ஸ் போல பயிற்சியாளர் செய்வதை அப்படியே அச்சு பிசகாமல் செய்ய வேண்டும் என்பது இல்லை. நடன அசைவுகளில் உங்களின் பிரத்யேக ஸ்டைலையும் டச்சையும் சேர்த்துக் கொள்ளலாம்.



உடற்பயிற்சி செய்வது போல கஷ்டம் இல்லை. ஒரு பார்ட்டி போல ஜாலியாக ஆடிவிட்டு வரலாம். அமெரிக்க உடற்பயிற்சி கழகம் (American Council Of Exercise) செய்த ஆய்வில், 50 நிமிட தொடர்ச்சியான ஜும்பா பயிற்சியின் போது சராசரியாக 500-750 கலோரிகள் எரிக்கப்படுவதாக கண்டறிந்தனர்.

இந்த அளவு, ஒருவரின் எடை, எந்த அளவு தீவிரமாக (Intensity) நடன அசைவுகளை செய்கிறார் என்று பல விஷயங்களைப் பொறுத்து வேறுபடும். எனினும், இது நிச்சயமாக ஒரு மணி நேரம் கிக் பாக்சிங் அல்லது ஸ்டெப் ஏரோபிக்ஸ் அல்லது பவர் யோகா செய்வதை விட அதிகம்தான்!

கை, கால், அடி வயிறு, தோள், இடுப்பு என அனைத்து அங்கங்களுக்கும் சரியான மற்றும் தீவிர அசைவுடன் கூடிய நடன அசைவுகள் மூலம் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்பை உபயோகித்து எடை குறைக்க ஏதுவாகிறது.

அலுவலகம் மற்றும் இல்லத்தில் தொடர்ச்சியான வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட மிகச் சிறந்த வழி. ஜும்பா பயிற்சியை முனைப்புடன் செய்யும்போது, மன நிலையை மகிழ்ச்சியாக மாற்ற உதவும் Endorphins என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கிறது.
Tags:    

Similar News