லைஃப்ஸ்டைல்

இரத்த அழுத்தத்தை சீராக்கும் கோமுக ஆசனம்

Published On 2017-04-15 06:53 GMT   |   Update On 2017-04-15 06:53 GMT
பசுவின் முகத்தைப் போன்று தோற்றம் அளிப்பதால், இந்த ஆசனம் இந்த பெயர் பெற்றது. இந்து ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்.
செய்முறை :

விரிப்பில் கால்களை முன்னே நீட்டியபடி உட்காரவும். இடது கையால் வலது காலைப் பிடித்து, இடது காலின் தொடைக்கு மேலே கொண்டு வந்து, பின் தொடைக்கு அருகே தரையில் வைக்கவும்.

பின் இடது காலை மடக்கி, வலது தொடைக்கு கீழ் வைக்கவும். இரு குதிகால்களும் பிட்டப் பகுதியை அணைத்தவாறு அல்லது வெகு அருகில் இருக்க வேண்டும். இரு கால்களின் மூட்டுகளும் ஒன்றன்மேல் ஒன்றாக நன்றாக இணைந்திருக்க வேண்டும்

மூச்சை இழுத்துக் கொண்டே வலது கையை மேலே உயர்த்தி, முதுகுக்குப் பின்னே கொண்டு செல்ல வேண்டும். மூச்சை வெளியே விட வேண்டும்
மீண்டும் மூச்சை இழுத்துக் கொண்டு, இடது கையை அடி முதுகின் வழியாக, உடம்பிற்கு பின்னே கொண்டு செல்லவும். இரு கைகளும் பிணைந்திருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும்.



கண்களை மூடிய நிலையில், ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, சுவாசத்தை கவனிக்கவும். பின் கைகளை விலக்கி, சாதாரண நிலைக்கு வந்து, கால், கைகளை மாற்றிச் செய்யவும். இவ்வாறு நான்கு முறை செய்யலாம்.

இந்த ஆசனத்தில் வலது கால் மேலே இருக்கும்போது, வலது கையும், இடது கால் மேலே இருக்கும்போது, இடது கையும் மேலே இருக்க வேண்டும்.

பலன்கள்:

உடல், மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் அற்புத ஆசனம்.

மூலாதாரச் சக்கரம் நன்கு தூண்டப்படும். சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்யும். முதுகு, இடுப்புக் கூடு, நரம்பு வாதம், கீல் வாதத்திற்கு நல்ல தீர்வு.

கழுத்து தோலின் இறுக்கம் நீங்கும். கர்ப்பப்பை நன்கு இயங்கும். ரத்த அழுத்தம் சீராகும்.

Similar News