லைஃப்ஸ்டைல்

முதுகு வலியை குணமாக்கும் அதோமுக ஸ்வனாசனா

Published On 2017-04-05 06:35 GMT   |   Update On 2017-04-05 06:35 GMT
உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.
உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. உடலின் வளைவுத்தன்மையை மேம்படுத்தும்.

செய்முறை :

தரையில், மண்டியிட்டு, பாதத்தை ஆங்கில வி (V) போல விரித்து, பாதம்மேல் உட்கார வேண்டும். உடல் நேராக இருக்கட்டும். இது, வஜ்ராசன நிலை. இப்போது, கண்களை மூடியபடி, கைகளை மேலே உயர்த்தி, முன்புறம் வளைந்து, நெற்றி, கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். பின்னர், கண்களைத் திறந்து, கையைத் தரையில் ஊன்றி முட்டி, மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி இருக்க வேண்டும்.

இப்போது, இடுப்பை உயர்த்தி, பாதம் மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி, மலை வடிவில் நிற்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு படியாகக் கடந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். கை மணிக்கட்டில் அடிபட்டிருக்கும்போதும், தலைவலி இருக்கும்போதும் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.



பலன்கள் :

மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனஅழுத்தம்​, பயம், மனச்சோர்வு தீரும்.

தோள்பட்டை, புஜம், கால்கள் வலுப்பெறும்.

உடல் எடையைத் தூக்கி நிறுத்தும் ஆசனம் என்பதால், எலும்புகள் வலுப்பெறும். எலும்பு அடர்த்தி குறைதல் வராமல் தடுக்கும்.

​முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.

​இந்த ஆசனத்தில் உடல் முழுதும் செயல்படுவதால், உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.

ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம். நாட்பட்ட தலைவலி சரியாகும்.​

Similar News