லைஃப்ஸ்டைல்

வாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் சுப்த வஜ்ராசனம்

Published On 2016-12-08 04:28 GMT   |   Update On 2016-12-08 04:28 GMT
வாயுத்தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சுப்த வஜ்ராசனத்தை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
சுப்த என்றால் மல்லாந்து படுத்தல் என்று பொருள்படும். வஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள்படும். அதாவது இந்த ஆசனத்தில் இருக்கும் போது கிடையாக வைக்கப்பட வைரம் போல் தோன்றுவதால் இந்தப் பெயர் உண்டாகியிருக்கலாம்.

செய்முறை :

பாதங்களின் மேற்பகுதி தரையில் படுமாறு, முழங்காலிட்டபடி அமர்ந்திருப்பது வஜ்ராசனம். அப்படியே பின்னுக்குச் சரிந்து கைகளைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டோ அல்லது கைகளை முடிந்த அளவு பின்னால் நீட்டிய நிலையில் படுத்திருப்பது சுப்த வஜ்ராசனம் எனப்படும். சாயும் போது வெளி மூச்சும் நிமிரும் போது உள் மூச்சும் வாங்குதல் சிறப்பு. கழுத்துப் பிடிப்புள்ளவர்கள், மூட்டுப் பிடிப்புள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள் இதனைத் தவிர்க்க வேண்டும்.

நன்மைகள் :

தொடை, இடுப்புப் பகுதியிலுள்ள தேவையற்ற சதையைக் கொழுப்பைக் குறைக்கும்.
கூன் முதுகு நிமிரும்.
வயிறு, இடுப்பு என்பன நன்கு நீட்டப்பட்டு உரம் பெறும்.
வாயுத்தொல்லை, மலச்சிக்கலுக்கு நல்ல ஆசனம்.

கால்களை மடக்கி அமர்ந்து பின்னால் முழுமையாகச் சரிய முடியாதவர்கள், கைகளை ஊன்றி அல்லது முழங்கையை ஊன்றி படிப்படியாகச் செய்து பார்க்கலாம்.
 
மிகவும் சிரமப்பட்டு இந்த யோகா பயிற்சியை செய்ய முயற்சி செய்ய வேண்டாம்.

Similar News