பெண்கள் உலகம்

படபடப்பை குறைக்கும் சுவாசப் பயிற்சிகள்

Published On 2016-10-27 13:44 IST   |   Update On 2016-10-27 13:44:00 IST
படபடப்பை குறைக்க தினமும் செய்ய வேண்டிய சுவாசப் பயிற்சிகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
கைகளை, உள்ளும் வெளியுமாக அசைத்துச் செய்யும் சுவாசப் பயிற்சி முறை :

நேராக நிமிர்ந்து நின்று கைகளை முன்னால் நீட்டிக்கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை அகட்டி, மார்பை விரிக்கவும். பின்பு மூச்சை வெளியே விட்டபடி பழைய நிலைக்கு வரவும்.

15 முதல் 20 முறை மெதுவாகச் செய்ய வேண்டும்.

கைகளை நீட்டிச் செய்யும் சுவாசப் பயிற்சி செய்யும் முறை :

நிமிர்ந்து நிற்கவும். கை விரல்களை கோத்துக்கொண்டு நிற்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை முன்னே நீட்டவும். உள்ளங்கைகள் வெளியே பார்த்தபடி, கைகளை இழுத்து நீட்டவும். மூச்சை வெளியேவிட்டபடி, பழைய நிலைக்கு வரவும்.

15 முதல் 20 முறை இதேபோல் செய்யவும். இதேபோல் கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி, பிறகு கீழே கொண்டு வரவும். மூச்சை உள்ளிழுத்து, மேலே உயர்த்தி மூச்சை வெளிவிட்டுக் கீழே இறக்கவும்.

கணுக்கால்களை உயர்த்திச் செய்யும் சுவாசப் பயிற்சி செய்யும் முறை :

நேராக நின்று மூச்சை உள்ளிழுத்தபடி கைகளை மேலே உயர்த்தவும். அதேநேரத்தில் குதிகால்களை உயர்த்தி கால் விரல்களில் நிற்கவும். மெதுவாக மூச்சை வெளியே விட்டபடி கைகளைக் கீழிறக்கும்போதே, குதிகால்களையும் கீழே வைத்து சமநிலைக்கு வரவும்.

இந்த சுவாசப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் கோபம், படபடப்பு குறையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Similar News