பெண்கள் உலகம்

அஜீரணத்திலிருந்து நிவாரணம் தரும் பூஷன் முத்திரை

Published On 2016-10-19 13:57 IST   |   Update On 2016-10-19 13:57:00 IST
அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
“பூஷன்” என்றால் “சூரியன்” என்று அர்த்தம். இந்த முத்திரை இரண்டு கைகளிலும் இரண்டு விதமாக செய்யவேண்டும்.  

செய்முறை :

வலது கையின் ஆள்காட்டி விரல், மற்றும் நடு விரலின் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

இடது கையின் நடு விரல், மற்றும் மோதிர விரல் நுனியும் பெருவிரல் நுனியை தொட்டுக்கொள்ளவேண்டும். மற்ற ஆள்காட்டி விரலும் சிறுவிரலும் நேராக வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். சில நிமிடங்கள் செய்தாலே இது நல்ல பலனை கொடுக்கும். உணவு சாப்பிட்டபின் இந்த முத்திரை பயிற்சி செய்தால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

இந்த முத்திரை பயிற்சியால் நிலம் காற்று ஆகாயம் பஞ்சபூத சக்திகள் நமது உடலுக்கு அதிகம் கிடைக்கிறது. அதாவது ஒரு கையால் சக்தி பெறப்பட்டு மற்றொரு கையால் சக்தி உடலுக்கு கொடுக்கப்படுகிறது.

பயன்கள் :

உடல் உறுப்புகள் வயிறு, கல்லீரல், மன்னீரல், பித்தப்பை சக்தி பெற்று நன்றாக வேலை செய்கிறது. நரம்புகள் வலுவடைந்து நரம்பு தளர்ச்சி நீங்குகிறது. குமட்டல் மற்றும் வாந்தியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் வாயுக்கோளாறுகளை நீக்குகிறது. வயிறு மற்றும் குடல்கள் சக்தி பெற்று அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

சாப்பிட்டு அரை மணிநேரம் கழித்து இந்த முத்திரை பயிற்சி செய்தால் நமது உணவு நன்றாக ஜீரணமாகிறது.  இந்த முத்திரை பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொடுக்கிறது.

Similar News