பெண்கள் உலகம்

சூரிய நமஸ்காரம் செய்யும் முறை

Published On 2016-04-29 12:59 IST   |   Update On 2016-04-29 13:00:00 IST
சூரிய நமஸ்காரம் நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன.
1. விரிப்பில் இரண்டு கால்களையும் நன்றாக சேர்த்து, நேராக நிமிர்ந்து நின்று, கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து, நமஸ்காரம் செய்வது போல கைகளை ஒன்றாக சேர்த்து, மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின், மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.

2. மூச்சை உள்ளிழுத்து, கைகளை மேலே துாக்கி, இடுப்பை சற்று பின்னே வளைத்து, இரு கைகளையும், காதுகளை ஒட்டி இருக்கும்படி செய்யவும். வானத்தை எட்டிப்பிடிக்க முயலும் பாவனை போல், இருக்க வேண்டும்.

3. மூச்சை வெளியே விடும்படியாக கைகள் இரண்டையும், தரையை தொடும்படி வைத்துக் கொள்ள வேண்டும். தலை வளைந்து, மூக்கும், நெற்றியும் முழங்காலை முட்ட முயலட்டும். முழங்கால் வளையாமல் செய்ய வேண்டும்.

4. மூச்சை உள்ளிழுத்தபடி, வலது காலை பின்னோக்கி வைத்து, இடது காலை முன்னோக்கி வைத்து, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை மேலே துாக்கி, சில வினாடிகள் அப்படியே இருக்க வேண்டும்.

5. மூச்சை வெளியே விட்டபடி, இரண்டு கால்களை பின்னே வைத்தும், இரண்டு கைகளை முன்னே வைத்தும், இடுப்பை மேலே துாக்கி,
முக்கோண வடிவத்தில் முழு உடம்பும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

6. மூச்சை உள்ளிழுத்து, தரையில் சாஷ்டாங்கமாக படுத்துக் கொள்ள வேண்டும். இரு கால் விரல்கள், இரு முழங்கால்கள், மார்பு, நெற்றி, இரு உள்ளங்கைகள் ஆக எட்டு அங்கங்களும், தரையை தொடும்படி இருக்க வேண்டும்.

7. மூச்சை உள்ளிழுத்து, தரையில் குப்புறப்படுத்து, தலையை துாக்கி, முதுகை பின்னால் இடுப்பின் பலத்தில் வளைக்க வேண்டும். முதுகு தண்டு இப்போது வெளிப்புறமாக வளைகின்றது. உடலின் பளு முழுவதும் உள்ளங்கைகளிலும், கால் விரல்களிலும் இருக்கும்.

8. இது, ஐந்தாம் நிலை போன்றதே. மூச்சை உள்ளே நிறுத்தி, இடுப்பை உயர்த்தி, கைகளை தரையில் நன்கு ஊன்றி, முழு ஓய்வும், தளர்ச்சியும், நாடி, நரம்புகளுக்கும் கொடுக்க வேண்டும்.

9. இது, நான்காம் நிலை சார்ந்ததே. கால்கள் மட்டும் மாறியிருக்கும். வலது காலை முன்னால் கொண்டு வருவதால், நாபிச் சக்கரம், பால் கோளங்கள், விந்து பைகள் சரிவர இயங்கும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே செய்ய வேண்டும்.

10. இது, மூன்றாம் நிலை போன்றதே. கைகள், பாதங்களுக்கு பக்கத்தில்; ஆனால், சற்று முன்னால் இருக்கட்டும். மூச்சை வெளியில் விட்டபடியே செய்ய வேண்டும்.

11. இது, இரண்டாம் நிலையே. மூச்சை நன்கு உள்ளிழுத்தப்படியே செய்ய வேண்டும்.

12. முதல் நிலையே, இறுதியிலும் செய்ய வேண்டும். மூச்சை வெளியிடும்படி செய்ய வேண்டும்.

- இந்த, 12 நிலைகளும் சேர்ந்து ஒரு நமஸ்காரம்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போது, மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். பீஜ மந்திரங்கள் ஆறு; சூரியனின் பெயர்கள் 12. இவற்றுடன், 'ஓம்' சேர்த்து சத்தமாக உச்சரித்தபடியே இந்த சூரிய நமஸ்காரத்தை செய்வது, நம் மனதை தட்டி எழுப்புவதற்கும், அதற்கு உரமூட்டுவதற்கும் உதவும்.

ஆசனம், பிராணாயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி சாதனாவாக
உள்ள இந்த சூரிய வணக்க முறையை, கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டு, தினமும், 1 நிமிடங்கள் ஒதுக்கினால், நம் ஊனுடல் பிரணவ தேகமாக மாறி அமையும் என்பது நிச்சயம்.

Similar News