உடற்பயிற்சி

10 நிமிடங்கள் நடப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்

Published On 2024-05-26 03:52 GMT   |   Update On 2024-05-26 03:52 GMT
  • நடைப்பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதயத்தை பலப்படுத்தும்.
  • நடைப்பயிற்சி மேற்கொள்வது வயிற்று அமிலங்களின் செயல்பாடுகளை சீராக்க உதவி செய்யும்.

மதிய உணவு உட்கொண்டதும் பலரும் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். சாப்பிட்ட உடனேயே உட்காரவோ, தூங்காமலோ சில நிமிடங்கள் நடப்பது நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்களும், மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். அதன்படி உணவு உட்கொண்டதும் 10 நிமிடங்கள் நடப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள் இவை...

செரிமானத்தை மேம்படுத்தும்

உணவு உட்கொண்ட பின்பு நடப்பது செரிமான அமைப்பின் செயல்பாடுகளை தூண்டி உணவை துரிதமாக நொதிக்கச்செய்ய உதவும். அதன் மூலம் வீக்கம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.

ரத்த சர்க்கரை அளவை சீராக்கும்

சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடை போடுவது இன்சுலின் உணர் திறனை அதிகரிக்கச் செய்யும். அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையக்கூடும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டதும் நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும். 

உடல் எடையை நிர்வகிக்கும்

உணவு உண்டதும் நடைபயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கிக்கொள்வது கலோரிகள் எரிக்கும் அளவை அதிகரிக்கச் செய்யும். இது உடல் எடை குறைவதற்கோ, உடல் எடையை சீராக பராமரிப்பதற்கோ உதவி புரியும். இந்த மென்மையான நடைப்பயிற்சி உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கவும் வழிவகை செய்யும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

நடைப்பயிற்சி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதயத்தை பலப்படுத்தும். இதய நோய் அபாயத்தை குறைக்கும். மேலும் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவும்.

மன அழுத்தத்தை குறைக்கும்

சாப்பிட்டதும் மேற்கொள்ளும் இந்த உடல் செயல்பாடு எண்டோர்பின்களை வெளியிட துணை புரியும். இது மனநிலையை மேம்படுத்தக்கூடியது. மன அழுத்தத்தையும் குறைக்கக்கூடியது. சிறந்த மனநலத்தை பேணுவதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வழிவகுக்கும்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

இந்த குறுகிய நடைப்பயிற்சி வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கச் செய்யும். நாள் முழுவதும் கலோரிகளை எரிக்கவும் உதவி புரியும். ஒட்டுமொத்த உடல் ஆற்றல் திறனையும், உடல் எடையையும் சீராக நிர்வகிக்க உதவும்.

நெஞ்செரிச்சலை தடுக்கும்

நடைப்பயிற்சி மேற்கொள்வது வயிற்று அமிலங்களின் செயல்பாடுகளை சீராக்க உதவி செய்யும். அமில ரிப்ளக்ஸ் மற்றும் இரைப்பை உணவுக்குழாய் ரிப்ளக்ஸ் நோய் அபாயத்தையும் குறைக்கும். மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும்

உணவு உட்கொண்ட பிறகு மென்மையான நடைப்பயிற்சி செய்வது சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி சிறந்த தூக்கத்திற்கு ஊக்குவிக்கும். அத்துடன் செரிமானம் துரிதமாக நடைபெறுவதும், மன அழுத்தம் குறைவதும் நிம்மதியான, ஆழ்ந்த தூக்கத்திற்கு பங்களிக்கும்.

மூட்டுகளைப்பலப்படுத்தும்

நடைபயிற்சி தசைகள் மற்றும் மூட்டுகளை பலப்படுத்தும். அந்த பகுதிகளில் ஏற்படும் வலியை தடுக்கவும் உதவும். மூட்டுகளை நெகிழ்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க நடைப்பயிற்சி செய்வதுதான் சிறந்த வழி.

உடல் ஆற்றலை மேம்படுத்தும்

சாப்பிட்ட பிறகு மந்தமான உணர்வு ஏற்படக்கூடும். நடைப்பயிற்சி செய்வது உடலின் ஆற்றல் மட்டங்களை அதிகரிக்க செய்துவிடும். மனதை தெளிவுபடுத்தவும், கவனத்தை மேம்படுத்தவும், சோர்வு உணர்வுகளைக் குறைக்கவும் உதவும்.

Tags:    

Similar News