லைஃப்ஸ்டைல்
இரண்டு வயது வரை குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள்

இரண்டு வயது வரை குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள்

Published On 2021-03-11 04:47 GMT   |   Update On 2021-03-11 04:47 GMT
குழந்தைகளின் வளர்ச்சியில் நான்கு மாதம் முதல் இரண்டு வயது வரையுள்ள காலகட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் எத்தகைய வளர்ச்சிகள் உருவாகும் என்பதை இங்கு காணலாம்!
குழந்தை கவிழ்ந்து கிடக்கும்போது தலை நிலையாக நிமிர்ந்து நிற்கும்.

குழந்தையின் பெயரைக் கூறி அழைக்கும்போது குரல் வந்த திசைக்கு திரும்பி புன்னகைத்து எதிர்வினையாற்றும்.

விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். கைகளைகொண்டு முகத்தை மூடித்திறக்கும் விளையாட்டில் ரசிப்புக்காட்டும்.

குடும்பத்தினரின் முகபாவத்திற்கு ஏற்ப எதிர்வினையாற்றும். மகிழ்ச்சி, கவலை, வலி போன்றவைகளை சத்தத்தில் வெளிப்படுத்த முயற்சிக்கும்.

அருகில் உள்ள பொருட்களை பற்றிப்பிடிக்க முயற்சிசெய்யும். கண்களையும், கைகளையும் ஒரே திசையில் செலுத்தும்.

கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தால் ரசித்து சிரிக்கும்.

சுயமாக கவிழ்ந்து விழுவது, பின்பு நிமிர்ந்து இயல்பு நிலைக்கு வருவது போன்றவைகளில் அடிக்கடி ஈடுபடும்.

சுயமாக அமர முயற்சிக்கும். சப்போர்ட் கொடுத்தால் நிமிர்ந்து நிற்கும்.

ஏழு மாதம் முதல் ஒரு வருடம் வரை

கவிழ்ந்து, தவழ்ந்து செல்லும். யாருடைய துணையும் இன்றி உட்காரும். கட்டில், இருக்கை போன்றவைகளை பிடித்துக்கொண்டு எழ முயற்சிக்கும்.

பெரியவர்கள் செய்வதை போன்று தானும் செய்ய விரும்பும். கண்ணடித்தால் அதுவும் கண்ணடிக்கும். கைதட்டினால் அதுவும் கைதட்டும்.

வீட்டில் உள்ள பொருட்களின் உபயோகத்தை உற்றுப்பார்க்கும். சீப்பால் முடியை சீவவும், கப்பில் தண்ணீர் பருகவும் முயற்சி செய்யும்.

தலையை இருபுறமும் ஆட்டி, மறுப்பை வெளிப்படுத்தும். டாடா காட்டும்போது பதிலுக்கு கையை வீசும்.

அம்மா, அப்பா போன்ற வார்த்தைகளை பேசத் தொடங்கும்.

பெற்றோரோ, தாத்தா- பாட்டி போன்றவர்களோ தன் அருகில் இருந்து விலகிச்செல்லும்போது அழும்.

பொம்மைகளை பற்றிப் பிடித்து தூக்கும். ஒரு கையில் இருந்து மறு கைக்கு அதனை மாற்றவும் செய்யும்.

ஒன்று முதல் இரண்டு வயது வரை

தானாகவே எழுந்து நிற்கும். துணையின்றி மெல்ல மெல்ல அடிவைத்து நடந்துசெல்லும்.

மற்ற குழந்தைகளோடு நெருக்கம் காட்டவும், அவர்களோடு சேர்ந்து விளையாடவும் விரும்பும்.

நிறங்கள், வடிவங்களை அடையாளங்காணத் தொடங்கும்.

குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை உணர்ந்துகொள்ளும். அந்தந்த பெயர்களை கூறும்போது அவர்களது முகத்தைப் பார்த்து சிரிக்கும்.

`இங்கே வா..', `அதை செய்யாதே..' போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கு உடன்பட்டு நடக்கும்.

வீட்டில் இருக்கும் பொருட்களின் பெயர்களை கூறும்போது அதனை சுட்டிக்காட்டும்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் செய்யும் செயலை தானும் செய்ய விரும்பும். நாளிதழ்களை படிப்பவர்களின் அருகில் இருந்து தானும் அதனை பார்க்கும். துணிகளை மடிக்கும்போது தானும் அதை செய்ய முயற்சிக்கும்.

மற்றவர்கள் பேசும் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்கும். மூன்று நான்கு வார்த்தைகளை சேர்த்து பேசும்.

இயங்கும் பொம்மைகளைவைத்து விளையாட விரும்பும். அதனை தூக்கிக்கொண்டு நடக்கும். பந்து விளையாட்டில் ஆர்வம் தோன்றும்.

(இவை அனைத்தும் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி நிலையாகும். அந்தந்த காலகட்டத்தில் அது அதற்குரிய வளர்ச்சி நிலையை குழந்தைகள் எட்டாவிட்டால் உடனடி கவனம் செலுத்துங்கள். தேவைப்பட்டால் குழந்தை நல நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்)
Tags:    

Similar News