பெண்கள் உலகம்
கொரோனாவுக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்கிறீர்களா?

கொரோனாவுக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்கிறீர்களா?

Published On 2021-03-09 10:07 IST   |   Update On 2021-03-09 10:07:00 IST
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.
கொரோனா கால முழு அடைப்பு முடிந்து படிப்படியாக பள்ளி கல்லூரிகள் திறக்கத் தொடங்கி உள்ளன. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு உங்களின் சக மாணவருக்கும் இருக்கும். எனவே அனைவருடனும் சகஜமாக பழகுங்கள். குறிப்பாக முதலாம் ஆண்டு செல்லும் கல்லூரி மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.

உயர்நிலைப்பள்ளி வரை ஆசிரியர்கள் சிறு சிறு விஷயங்களிலும் உங்களை வழி நடத்தி வந்தனர். ஆனால் கல்லூரியை பொறுத்தவரை ஒவ்வொன்றுக்கும் நீங்களாகவே தயாராக வேண்டும்.

படிப்பதற்கு என்று பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்களின் ஓய்வு அறை அல்லது நூலகம் போன்ற எந்த இடத்தையும் படிப்பதற்கு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

வகுப்புகளை புறக்கணிக்காமல் செல்வது மிக மிக முக்கியமானது. சக மாணவர்களின் தூண்டுதல் காரணமாக வகுப்புகளை புறக்கணித்தால் பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம்.

பள்ளிப்படிப்பை முடித்த போதிலும், பல மாணவர்களுக்கு திறம்பட படிப்பது எப்படி என்பது தெரியாதது வருத்தத்திற்குரியது. மனப்பாடம் செய்து எழுதும் முறையை தவிர்த்து கேள்விகள் கேட்டு புரிந்து கொண்டு படிக்க வேண்டும். வகுப்புகளில் கூறப்படும் குறிப்புகளை எடுத்துக்கொண்டு தெளிவில்லாத விஷயங்களை பற்றி விவாதித்து பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டுப் படிக்க வேண்டும்.

வகுப்புகளில் அலைபேசிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வகுப்பு நேரங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களை சரி பார்ப்பது போன்ற கவனத்தை சிதற செய்யும் செயல்களை தவிர்க்க வேண்டும்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் பெரும்பாலும் அதிக அளவில் செலவு செய்கிறார்கள் என்று புகார் கூறப்படுவதுண்டு . வீட்டில் இருந்து விலகி வாழ்வதால் கிடைத்த சுதந்திரம், நண்பர்களின் தூண்டுதல் போன்றவையே அதிகமாக செலவு செய்ய வைக்கிறது. எனவே தேவையானவற்றுக்கு மட்டுமே செலவு செய்யப்பழக வேண்டும்.

முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்கள் கால தாமதமாக தூங்குவதை தவிர்க்க வேண்டும். தூக்கம் சீர்கெடும் போது அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போக நேரிடும். படிப்பிலும் கவனம் குறையும்.

Similar News