லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு காய்ச்சலால் வரும் வலிப்பு ஆபத்தா?

குழந்தைகளுக்கு காய்ச்சலால் வரும் வலிப்பு ஆபத்தா?

Published On 2021-02-10 04:28 GMT   |   Update On 2021-02-10 04:28 GMT
பொதுவாக 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வரும் போது வலிப்பு நோய் ஏற்படலாம். இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நிமிஷ நேரம் வரையில் மட்டுமே இருக்கும்.
குழந்தைகளுக்கு சாதாரண நோய் என்றாலே பெற்றோர்கள் துடிதுடித்து விடுவார்கள். அதிலும் காய்ச்சல் மற்றும் வலிப்பு சேர்ந்து வந்தால் அவர்களது அச்சத்தின் எல்லையை குறிப்பிட வார்த்தைகளே இல்லை.

காய்ச்சலோடு வரும் வலிப்பு நோய்கள் குறித்த தகவல்கள் சில...

வலிப்புடன் (ஜன்னி) வரும் காய்ச்சல் என்றால் என்ன?

பொதுவாக 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வரும் போது வலிப்பு நோய் ஏற்படலாம். இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு நிமிஷ நேரம் வரையில் மட்டுமே இருக்கும். அப்போது குழந்தை மயக்க நிலையை அடையும். காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருக்கும்.

வலிப்புடன் கூடிய காய்ச்சல் யாருக்கு வரும்?

பொதுவாக 25 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இத்தகைய வலிப்பு வரலாம். இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைக்கு திரும்பத் திரும்ப வலிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆறு மாதங்களுக்கு முன்போ அல்லது 3 வயதுக்கு பின்போ இது முதன்முறையாக வருவதில்லை. பெரிய குழந்தைகளுக்கு வரும் போது அது திரும்ப வருவது அரிது.

திரும்பத்திரும்ப காய்ச்சல் வலிப்பு வருவதற்குக் காரணம் என்ன?

முதலாவதாக வரும் வலிப்பு 6 முதல் 15 மாதங்களுக்குள் வந்தால் அந்தக் காய்ச்சலுடன் கூடிய வலிப்பு திரும்பத் திரும்ப வரும். குடும்பத்தில் இதுபோன்று வேறு யாருக்காவது நோய் இருந்தாலும் திரும்பத் திரும்ப வருவதற்கு வாய்ப்புண்டு. காய்ச்சல் வந்த பின்பு சில மணி நேரங்களில் வரக்கூடிய வலிப்பும் திரும்பத் திரும்ப வரும்.

வலிப்புடன் வரும் காய்ச்சலால் ஆபத்து உண்டா?

இந்த வலிப்புடன் வரும் காய்ச்சல் பெற்றோரை பயமுறுத்துமே தவிர பொதுவாக குழந்தைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. குழந்தைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் அறிவுத்திறன் ஆகியவற்றிலும் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

ஒரு சில குழந்தைகள் வலிப்பு வரும் போது கீழே விழுவதாலோ அல்லது வாயில் உள்ள உமிழ்நீர் மற்றும் உணவுப் பொருள்களால் புரை ஏறுவதாலோ பாதிப்பு ஏற்படலாம்.

வலிப்பு வரும் போது என்ன செய்ய வேண்டும்?

குழந்தைக்கு வலிப்பு வந்தவுடன், பெற்றோர் பதற்றமடைந்து விடக்கூடாது. பொறுமையாக இருந்து குழந்தையை நன்கு பராமரிக்க வேண்டும். வலிப்பு காரணமாக குழந்தையின் உடலில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வலிப்பு ஏற்படும் போது குழந்தையை அழுத்திப் பிடிக்கக்கூடாது. புரையேறுவதைத் தடுக்க குழந்தையை மல்லாக்க படுக்க வைக்காமால் பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் வாயில் உணவையோ, திரவத்தையோ வேறு ஏதேனும் பொருள்களையோ கொடுக்கக் கூடாது.

வலிப்பு வந்த நேரத்தை குறித்து வைத்து கொண்டு 10 நிமிஷ நேரத்துக்கும் அதிகமாக வலிப்பு நீடித்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும். குழந்தைக்கு வலிப்பு நின்ற பின்பு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குழந்தை மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

எப்போது குழந்தையை உடனே அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்ல வேண்டும்?

வலிப்பு 10 நிமிஷத்துக்கும் அதிகமாக இருந்தாலோ, குழந்தையின் கழுத்து பிடரி ஆகியவை விரைப்பாக காணப்பட்டாலோ, குழந்தை சோர்வாக இருந்தாலோ, திரும்பத் திரும்ப வாந்தி ஏற்பட்டாலோ உடனே குழந்தையை மருத்துவரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இது மூளைக் காய்ச்சல் அல்லது வேறு வகை காய்ச்சலாகக்கூட இருக்க வாய்ப்பு உண்டு.

காய்ச்சலால் வரும் வலிப்புக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்?

ரத்த பரிசோதனை, முதுகுத் தண்டுவட நீர் பரிசோதனை மற்றும் இதர மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்வது அவசியம். இதனால் குழந்தைக்கு மூளைச் காய்ச்சல் போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். பரிசோதனை முடிவுக்கு ஏற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.

வலிப்பைத் தடுக்க என்ன வழி?

காய்ச்சல் வரும் போது அதனைத் தொடர்ந்து வலிப்பும் வருவதால் காய்ச்சலைத் தடுக்க மருத்துவர் கொடுக்கும் காய்ச்சல் தடுப்பு மருந்தை (பாராசிட்டாமல்) வீட்டில் வைத்துக் கொண்டு சரியான நேரத்தில் குழந்தைக்குக் கொடுத்தால் வலிப்பைத் தடுக்கலாம்.

மருத்துவர் ஆலோசனையின் படி காய்ச்சல் வரும் போது ஏற்படும் வலிப்புக்கு அளிக்குமாறு கூறிய மருந்தை முதல் மூன்று நாள்கள் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த மருந்தை 6 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது இல்லை.

காய்ச்சல் இல்லாமல் வரும் வலிப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல் இல்லாமல் வலிப்பு வந்தால் அது மேற்கூறிய வகை வலிப்பு நோயாக இருக்காது. அதற்கு தகுந்த குழந்தை மருத்துவரை அணுகி மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

இத்தனை விவரங்களையும் தெரிந்து கொண்ட நீங்கள் இனி மேல் குழந்தைக்கு காய்ச்சலால் வலிப்பு வந்தால் பயப்பட மாட்டீர்கள் தானே!

டாக்டர் வி.டி.ராஜேஷ் இளம்சிசு மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, பாளையங்கோட்டை செல்: 94865 59911.
Tags:    

Similar News