லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்..

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள்.. கலங்கும் பெண்கள்..

Published On 2020-11-19 03:24 GMT   |   Update On 2020-11-19 03:24 GMT
பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் ஆண்குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
“இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு என்ன ஆகிறது என்பதே தெரியவில்லை. குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை உருவாக்குவதும் அதிகரித்து வருகிறது. பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் அவைகளை கொல்லும் சம்பவங்களும் தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன” என்று குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி விளக்குகிறார், முனைவர் ஆர்.ரமாதேவி. 48 வயதான இவர் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிராக உலகளாவிய நிலையில் செயல்படுபவர். கூடவே ஏராளமான நாடுகளுக்கு கல்விரீதியான பயணங்கள் மேற்கொண்டு, சர்வதேச அளவிலான கல்வியியல் ஆய்வுகளை மேற்கொள்பவர். பெண்களுக்கான உரிமைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் ஐக்கிய நாட்டு சபையிலும் உரையாற்றியிருப்பவர்.

‘உமன் அன்ட் சைல்டு கேர் இன்டர் நேஷனல்’ என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் ஆர்.ரமாதேவி, சமீபத்தில் லண்டனை தலைமையகமாக கொண்ட ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற ஆன்லைன் வானொலியில் ‘குழந்தைகளின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் தமிழில் உரை நிகழ்த்தினார். புதுமையான சிந்தனைகளும், புள்ளி விபரங்களும் கொண்ட அந்த பேச்சு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இவர் தேனியை சேர்ந்தவர். தற்போது சாத்தூர் ராமலிங்கபுரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றுகிறார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது உள்பட பல் வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அவருடன் நமது உரையாடல் :

சமீபத்தில் நிகழ்த்திய லண்டன் ரேடியோ உரை பற்றி கூறுங்கள்?

“உலகளாவிய நிலையில் மாணவர்களுக்காக 24 மணிநேரமும் ‘ஸ்கூல் ரேடியோ’ என்ற வலைதள வானொலி இயங்கிக்கொண்டிருக்கிறது. லண்டனை தலைமையகமாக கொண்டு ஒலிபரப்பும் அந்த வானொலியில் அவ்வப்போது மாணவர்களுக்காக பல்வேறு தலைப்புகளில் ‘டாக் ஷோ’ நடக்கும். அதில் தற்போது நான் ‘குழந்தைகள் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் பேசிய கருத்துக்கள் தமிழகத்தில் பெருவாரியான மக்களை சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனாலும் சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டுதானே இருக்கின்றன?

ஆமாம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முன்பு கூட்டுக்குடும்பங்கள் இருந்தன. அதில் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி என்ற உறவுச் சங்கிலிகளின் பிணைப்பு இருந்தது. இப்போது தனிக்குடித்தனங்களாகிவிட்டதாலும், பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதாலும், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது.

அத்தை, சித்தி, அக்காள் என்று உறவுகளோடு கலந்திருந்த ஆண்கள், இப்போது தனிமையாகி பெண்களை உறவினர்களாக பார்க்காமல் வெறும் உருவங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். பெரியவர்கள், சிறியவர்கள் என்ற வேறுபாடு எதுவுமின்றி எல்லோரது கையிலும் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அவர்களை எளிதாக தடம்புரள வைத்துவிடுகின்றன. அதனால் காத்திருக்கும் மனநிலையை கொண்டிருக்காமல் எல்லாவற்றையும் விரைவாக அனுபவித்து பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலே உருவாகிவிடுகிறது. குழந்தைக்கு எதிரான வன்முறையில் அறிந்தோ அறியாமலோ பலர் ஈடுபடுகிறார்கள். ஒருசில குடும்பங்களில் பெற்றோராலே குழந்தைகள் பாதிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றி சர்வதேச புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?

“யூனிசெப் நிறுவனம் 53 சதவீத குழந்தைகள் பாலியல் தொந்தரவை கடந்தே வருகிறார் கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஆண் குழந்தைகளும் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகும் குழந்தைகளில், 95 சதவீதம் பேர் குடும்பத்திற்கு தெரிந்தவர்களாலே சூறையாடப்படுகிறார்கள். அதனால் குடும்ப மானம் பறிபோவதாக கூறி பெரும்பாலான புகார்கள் வாபஸ் பெறப்பட்டுவிடுகிறது. 30 சதவீதம் குற்றவாளிகளுக்குதான் தண்டனை கிடைக்கிறது. நிறைய பேர் தப்பிவிடுகிறார்கள். யூனிசெப் அமைப்பு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயத்தில் எத்தகைய தவறான எண்ணங்கள் சமூகத்தில் இருப்பதாக கருதுகிறீர்கள்?

“பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் ஆண்குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். படிக்காத குடும்பத்து குழந்தைகளே பாதிக்கப்படுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர், படிக்காதவர், ஏழை என்ற பாகுபாடெல்லாம் இதில் கிடையாது. எல்லா குழந்தைகளுமே பாலியல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். அதுபோல் பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளாக பெண்கள் அணியும் ஆடையும் ஒரு காரணம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூன்றரை வயது குழந்தைகூட பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. அதனால் ஆடையையும் ஒரு காரணமாக கூறமுடியாது.

பெற்றோர், குழந்தைகளிடம் நட்போடு பழகி, அவர்களுக்கு பள்ளியில், வெளியிடங்களில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் மனம்விட்டு பேச வைக்கவேண்டும். பள்ளிப் பாடங் களோடு வாழ்க்கைத்திறன் சார்ந்த பாடங்களையும், பாதுகாப்பு முறைகளையும் கற்றுக்கொடுத்து எப்போதும் விழிப்புடன் நடந்துகொள்ள ஊக்குவிக்கவேண்டும். பாலியல் கல்வி வாயிலாக அவர்களுக்கு உடல் நலம், மனநலம், பாதுகாப்பு முறைகள் பற்றியும் கற்றுத்தருவது மிக அவசியம்” என்கிறார், முனைவர் ரமாதேவி.
Tags:    

Similar News