லைஃப்ஸ்டைல்
11+ வயதுள்ள குழந்தையிடம் செல்போன் கொடுக்கும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...

11+ வயதுள்ள குழந்தையிடம் செல்போன் கொடுக்கும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...

Published On 2020-10-08 03:50 GMT   |   Update On 2020-10-08 03:50 GMT
11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் செல்போன் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
குழந்தைகள் மொபைலுக்கு அடிமையாகி வருகின்றனர். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் பாடல் கேட்பது, கேம்ஸ் விளையாடுவது என்பதோடு நின்றுவிடுகிறார்கள். அதற்கடுத்த வயது குழந்தைகள்தான் ஆன்லைனில் சென்று சோஷியல் மீடியாவில் உலாவ சென்றுவிடுகிறார்கள்.

சோஷியல் மீடியா என்பது இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டம். ஆனால், அதையெல்லாம் மொபைல் பயன்படுத்துபவர்களிடம் பார்க்கவே முடிவதில்லை.

11 + வயதுள்ள உங்கள் குழந்தையிடம் மொபைலைக் கொடுக்கும்போது சில விஷயங்களில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

ஒன்று: ஆன்லைனைப் பயன்படுத்துவது மற்றும் சோஷியல் மீடியாவில் உலாவுவது போன்றவற்றைப் பற்றிய அடிப்படை செய்திகளை உங்கள் குழந்தையிடம் உரையாடுங்கள். அவற்றில் உள்ள ப்ளஸ் போலவே மைனஸையும் எடுத்துக்கூறுங்கள்.

இரண்டு: மொபைலைக் குழந்தையிடம் கொடுக்கும் முன், உங்களின் சோஷியல் மீடியா கணக்குகளிலிருந்து Logout ஆகிவிட்டு கொடுங்கள். ஏனெனில், உங்களை நம்பி யாரேனும் ரகசியமாகப் பகிர்ந்திருக்கும் செய்திகளை உங்கள் குழந்தை படித்துவிட கூடும். மேலும், சோஷியல் மீடியாவில் உலாவ நீங்களே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததைப் போலாகி விடும்.

மூன்று: வங்கி கணக்குகளை மொபைல் மூலம் பராமரிக்கிறீர்கள் என்றால், பாஸ்வேர்டு மாற்றி விட்டுக் கொடுங்கள். மேலும், வங்கி ஆப் பற்றி தெளிவாகச் சொல்லுங்கள். ஏதேனும் தவறுதலாக அழுத்திவிட்டால் பணம் போய்விடக்கூடும் என்பதை நன்கு மனதில் பதியும்படி கூற மறந்து விடாதீர்கள்.

நான்கு: உங்கள் மொபைலின் தேவையற்ற ஆப்களை டெலிட் செய்துவிட்டு குழந்தையிடம் மொபைலைக் கொடுங்கள். Parental control எனும் ஆப் மூலம் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே மொபைலைப் பயன்படுத்தலாம் என்பதாக செட் பண்ண முடியும். இதுபோன்ற டெக்னாலஜி விஷயங்களைத் தெரிந்துகொள்ள தயக்கம் காட்டாதீர்கள்.

ஐந்து: உங்கள் குழந்தை சோஷியல் மீடியாவில் உலாவ தொடங்கி விட்டது என்றால், மிகுந்த கவனத்தோடு இருங்கள். அவற்றிற்கான பாஸ்வேர்டுகளை எவ்வளவு கடினமாக அமைப்பது என்பதைச் சொல்லிக்கொடுங்கள். மேலும், குடும்ப போட்டோக்களைப் பகிரக்கூடாது என்ற கொள்கையை நீங்களும் குழந்தையும் சேர்ந்தே எடுங்கள்.

ஆறு: ஏதேனும் ஆப் டவுண்லோடு செய்வதென்றால், அதன் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகச் செய்யக் கற்றுக்கொடுங்கள். உங்கள் போனுக்கு வரும் மெசேஜ்ஜை தானாக ஹேண்டில் செய்ய ஓகே வா என்று கேட்பதற்கெல்லாம் ஓகே என்று கொடுக்கக்கூடாது என்று சொல்லுங்கள்.

ஏழு: மிக முக்கியமாக, குழந்தையிடம் மொபைலைக் கொடுப்பதற்கு முன் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நடைமுறையில் உள்ளதா என்று செக் பண்ணுங்கள். இல்லையெனில் வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் மொபைல் உள்ளாகி விடக்கூடும்.

இவையெல்லாம் எச்சரிக்கைதான். உங்கள் குழந்தையை குற்றவாளிபோல கண்காணிக்க வைப்பது அல்ல. எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பிலும் நல்லது, கெட்டது இரண்டும் இருக்கும். அதை குழந்தைகள் பழகும்வரை பெரியவர்கள் கண்காணிப்பது தவறல்ல.
Tags:    

Similar News